இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வடக்கு கிழக்கிற்கான நான்கு நாள் பயணமொன்றை ஆரம்பித்திருக்கின்றார். பயணத்தின் முதல்நாளான கடந்த வியாழக்கிழமை மன்னாருக்குச் சென்றவர் பல நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த ‘ராம்சேது’ பால இணைப்பு பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கு இராமர், மற்றும் ஆஞ்சநேயர் பூஜைகளை நிகழ்த்தியவர் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை உருவாக்கும் வரலாற்றுக் கட்டமைப்புக்களை நினைவு கூர்ந்திருந்தார். 

போர் நிறைவுக்கு வந்ததன் பின்னரான சூழலில் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட முதலாவது இந்தியத் உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே உள்ளார். வடக்கின் மூன்று தீவுகளின் மின்சாரத்திட்டம், பளைப் பகுதியில் காணிகளை பெற்றுக்கொள்ளல், சாவகச்சேரியில் தனியார் நிறுவனம் என்று சீனாவின் வெவ்வேறு வடிவிலான பிரசன்னங்கள் மேலெழ ஆரம்பித்துள்ளமை தொடர்பில் பல தரப்பட்டவர்களின் சுட்டிக்காட்டல்களுக்கு பின்னரான நிலையில் உயர்ஸ்தானிகரின் விஜயம் நீண்ட விஜயமொன்று நடைபெறுகின்றது. 

அதேநேரம், ‘ராம்சேது’ பால இணைப்பிடத்தில் மேற்கொண்ட பூஜைவழிபாடுகளும், பிரார்த்தனையும் திரைமறைவில் இரண்டு வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளது. முதலாவது, ஏற்கனவே காணப்பட்ட பாலத்தினை மீண்டும் நிர்மாணிப்பது தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் கரிசனையை பிரதிபலித்துள்ளது.  இரண்டாவது, இந்து சமய ரீதியில் வடக்கிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்பினை பிரதிபலித்துள்ளது. அதாவது இந்துத்துவா கொள்கையின் விஸ்தரிப்பை காண்பித்துள்ளது. 

இந்த இரண்டு விடயங்களும் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்படும் மிகப்பெரும் செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. இதனை விடவும் வடக்கின் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் என்று உயர்ஸ்தானிகர் பலசந்திப்புக்களை நடத்தியிருப்பதும் கிழக்கிலும் அவ்விதமாக செயற்பட்டிருப்பதும் 'வடக்கும் கிழக்கும் (எமது) எம்மவர்களது” என்ற செய்தியை சொல்லாமல் சொல்யிருக்கின்றது.

பசிலே ஜனாதிபதி வேட்பாளர்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகர் மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவே போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.   

இந்த விடயம் காரணமாகவே பசில் ராஜபகஷவுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கும் இடையில் பாரிய முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரானால் தமது கட்சிக்கு சிக்கல் ஏற்படும் என்று விமல் வீரவன்ஷ சிறு கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்கின்றனர். அதன் காரணமாக அந்த முயற்சியை தற்போதே தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

கடந்த காலத்தில் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை
கட்சிகளுடன் பசில் ராஜபக்ஷ மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்தார். அந்த வகையில பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரிஷாத் பதியுதீனின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள கூடும் என்ற அடிப்படையிலேயே முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசிலர் சேர்ந்து இயங்க முயற்சிப்பதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். 

இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ தரப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பசில், விமல் முரண்பாடு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

பதிலளிக்க விரும்பாத தினேஷ்
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் வெளியிட்டிருந்த மீளாய்வு அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் அளித்த பதில் தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்தவாரம் எழுத்துமூலமான அறிக்கையொன்றை அனுப்பியிருந்தார். 

மிகக் காட்டமான அந்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன எந்த விதமான பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அந்த அறிக்கைக்கு பதிலளிக்க முடியுமா என்று தினேஷ் குணவர்தனவிடம் “கேட்டபோது தமிழ்த் கூட்டமைப்பு இவ்வாறு அறிக்கை விடுகிறது என்பதற்காக தான் பதில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமில்லை. எது நடக்க வேண்டுமோ அவை அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும்” என்று கூறியிருக்கின்றார். 

ரெலோவின் போர்க்கொடியால் ஒன்று கூடிய நான்கு எம்.பிக்கள்
சம்பந்தன், அமைச்சர் தினேஷ்க்கு அனுப்பிய அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ரெலோ போர்க்கொடி தூக்கியிருந்தது. ரெலோவின் ஊடகப்பேச்சாளராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட முதலாவது ஊடக அறிக்கை. 

பிரித்தானியா தலைமையில் முன்மொழியப்பட்ட பூச்சிய வரைவினை ஆதரித்ததாக கூறி சம்பந்தனையும் தமிழரசுக்கட்சியையும் அந்த அறிக்கை மிகக்காட்டமாகச் சாடியிருந்தது.  பூச்சிய வரைபினை ரெலோ கடுமையாக எதிர்க்கிறது. சுமந்திரன் அதனை வரவேற்கிறார். குழப்பமடைந்த தமிழரசுக்கட்சியின் எம்.பிக்கள் அதுபற்றிய விளக்கத்தை கோருவதற்காக சுமந்திரனைச் சந்திப்பதென முடிவெடுத்தனர். ‘கூட்டம்’ இருப்பதால் சாணக்கியன் சந்திப்பில் பங்கேற்கவில்லை. சிறிதரன், சார்ள்ஸ், கலையரசன் ஆகியோரே சுமந்திரனைச் சந்தித்தனர். 

அரசியலமைப்புக்கான பொருள்கோடல் செய்ப்படுவது போன்று அவர் பூச்சி வரைவின் அவதானங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான வசனங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதன் ‘உள்ளீட்டை’ தெளிவுபடுத்தினார். சுமந்திரன் அளித்த தெளிவால், மூன்று எம்.பிக்களும் திருப்தியுடன் ‘கப்சிப்’பாக திரும்பியுள்ளனர். 

இதவேளை இந்த சந்திப்புக்குள் இதர இரு விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன. கூட்டமைப்பு எம்.பிகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு தொடர்பில் திருப்தியின்மை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை எதிர்க்கட்சித்தலைவர் சஜித்துடன் நேரடியாக பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து, பேச்சாளர், கொரடா, சம்பந்தன் ஐயா இல்லாத நேரத்தில் பாராளுமன்ற குழுவின் தலைமை என்று அனைத்துச் சுமைகளையும் தன்னால் சுமப்பது கடினம் என்ற தொனிப்பட சுமந்திரன் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். தமிழரசுக்கட்சிக்குள் யாராவது ஒருவர் இந்தப்பதவியை ஏற்க வேண்டும் என்றும் சுமந்திரன் கோரியிருக்கின்றார். இந்நிலையில் சுமந்திரனுடன் ‘ஒடும் புளியம்பழமுமாக’ இருக்கும் சார்ள்ஸை பரிந்துரைத்திருக்கின்றார் சிறிதரன். அதற்கு சுமந்திரனும் பச்சைக் கொடி காட்டியிருக்கின்றர். 

இந்த சந்திப்புக்களின் பின்னர் ரெலோவின் அறிக்கை தொடர்பில் சுமந்திரனிடத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருக்கின்றார். அப்போது, “ஐயா அறிக்கை அனுப்புவதற்கு முன்னதாக அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு அவருக்கு அனுப்பி வைத்திருந்தார். அவருடைய சம்மதம் பெறப்பட்ட பின்னரே  அறிக்கையில் அவருடைய பெயர் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் பிராந்திய ஊடகமொன்றில் வெளியான அறிக்கை பற்றிய ‘திரிவுபடுத்தப்பட்ட’ செய்தியை படித்து விட்டு ஊடகப்பேச்சாளர் அறிக்கை விட்டிருக்கின்றார். இதனை என்னவென்று சொல்வது என்று கவலை பட்டாராம் சுமந்திரன்.

அதேநேரம், சித்தார்த்தனின் தொலைபேசி அவ்வப்போது மட்டுமே இயங்குவதால் சம்பந்தன் ஐயா, முக்கியமான விடயங்களை அவருடன் கலந்துரையாட முடிவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கின்றார். அந்தக் கவலையை சித்தார்த்தனுக்கும் தெரிவித்திருக்கின்றார். தினேஷிற்கு அனுப்பும் அறிக்கை பற்றி பேசுவதற்கு கூட சம்பந்தன் பல தடவைகள் முயற்சியின் பின்னரே சித்தார்த்தனை தொடர்பு கொண்டதாக தகவல். 

தோல்வி அடைந்த விக்கி கஜனின் கூட்டு முயற்சி
ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள மூன்று கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில், மத தரப்புக்கள் ஒன்றிணைந்து கடிதம் அனுப்பி வைத்திருந்தன. அதில் கோரப்பட்ட விடயங்கள் எவையுமே முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை பற்றிய பூச்சிய வரைவில் இல்லாமையினால் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் தரப்புக்கள் சீற்றமடைந்திருந்தன. இதனால் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட இணக்கத்திற்கு அமைவாக பூச்சிய வரைவு தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டு மற்றுமொரு கடிதத்தினை கூட்டிணைந்து அனுப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூச்சிய வரைபை வரவேற்றுவிட்டால் அந்த முயற்சியில் கூட்டமைப்பு கழற்றி விடப்பட்டது. 

எஞ்சிய இருதரப்பான கஜன் மற்றும் விக்கி அணிகள் இடையே பேச்சுகள் நடைபெற்றன. இருப்பினும் 13ஆவது திருத்தச்சட்டத்தினால் பயனில்லை என்பதை அதிருப்பதி கடிதத்தில் இணைக்க வேண்டும் என்பதில் கஜன் தரப்பு உறுதியாக இருந்தது. ஒற்றை ஆட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அத்தரப்பின் வாதமாக இருந்தது. ஆனால் விக்கி தரப்பில் 13ஐ முழுமையாக அமுலாக்க அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று கோடிட்டு காட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஈற்றில் இருதரப்புக்கும் இணக்கப்பாடு எட்டப்படாமையால் பூச்சி வரைவு தொடர்பான அதிருப்தி கடித விடயம் கைவிடப்பட்டது.  

முன்னாள், இந்நாள் பிரதமர்களின் சந்திப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பெந்தொட்டவில் உள்ள பிரதமர் மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றார்.  இந்தச்சந்திப்பு ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றிருக்கிறது. பிரதமர் மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவும் இதில் பங்கெடுத்திருக்கின்றார். 

இதன் போது, இராப்போசனத்துடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அரசியல் மற்றும் தனிப்பட்ட விடயங்கள், குடும்ப விடயங்கள்  உள்ளிட்ட பல்வேறு துறைகள் இருவரும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். மிக முக்கியமாக அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஈஸ்டர் தாக்குதல் விசாரணை, அறிக்கை  போன்றன  தொடர்பாக இதன்போது பேசப்பட்டிருக்கிறது.  

இந்தச் சந்திப்பின் நிறைவில் ரணில் விக்ரமசிங்க பிரதமர் மாளிகையை சுற்றி பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கும்போதே இந்த மாளிகை புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.  ஆகவே தனது காலத்தில் செய்யப்பட்ட புணர்நிர்மான நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பாக அவர் பார்வையிட்டுள்ளார். அப்போது “யார் புனர்நிர்மாணம் செய்தால் என்ன அது சரியாக அமைந்தால் சந்தோஷம் தான்” என்று தனது மகிழ்ச்சிப் பதிவினைச் பிரதமர் மஹிந்தவிடத்தில் செய்திருக்கின்றார் ரணில்.

இம்ரான் கானுக்கான  விருந்து உபசாரத்தில் ஒருவட்ட மேசை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விருந்து உபசாரம் அளித்திருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து இருந்தனர். அச்சமயத்தில் மைத்திரிபால சிறிசேனவை பார்த்து விக்கிரமசிங்க “ஹலோ எப்படி இருக்கிறீர்கள்” என்று கேட்டு இருக்கின்றார். அதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன “நான் நன்றாக இருக்கிறேன் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.  அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன “ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா” என்று கேட்டிருக்கின்றார். 

அப்போது ரணில் “தனக்கு இன்னும் கிடைக்கவில்லை” என்று பதிலளித்திருக்கின்றார். அப்போது மைத்திரிபால “அந்த அறிக்கையில் என்னை சிக்க வைத்துள்ளதாக அறியக்கிடைக்கிறது அறிக்கை வெளியாகட்டும் பார்க்கலாம்” என்று தெரிவித்திருக்கின்றார்.

அருகில் இருந்த சஜித் பிரேமதாஸ நீண்ட மௌனதிற்கு பின்னர் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார்.

பாராளுமன்றம் வருகிறார் ரணில்
ஐக்கிய தேசிய  கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது. அந்த தேசியப்பட்டியல் ஆசனம் இதுவரை நியமிக்கப்படாமல் இருக்கின்றது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தேசியப் பட்டியல் ஆசனத்தின்  ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என்று கட்சியில பலரும் தெரிவித்து வருகின்றனர்.  

ஆனால் ரணில் இதுவரை அதனை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார். தேசியப் பட்டியல் ஆசனத்தை உடனடியாக ஏற்க வேண்டும் என்ற எந்தவிதமான சட்ட தேவையும் இல்லை. எனினும் தொடர்ந்து காலம் கடப்பதை கட்சி உறுப்பினர்கள் விரும்பவில்லை. ஆகவே ரணிலை தேசியப்பட்டியல் உறுப்பினராக விரைவில் பாராளுமன்றத்தில் அனுப்ப வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கு ரணில் விக்கிரமசிங்கவும் பச்சை கொடி காட்டி விட்டாராம். அதுமட்டுமன்றி கட்சியை நாடளாவிய ரீதியில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று சகலருக்கும் ரணில் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றார்.

முக்கியமாக புதிதாக சிந்தித்து புதிய இளைஞர் யுவதிகளை கட்சியில் இணைத்துக் கொண்டு புதியதொரு பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி ஒரு சரியான ஒருவர் தலைவராக அடையாளம் காணப்படும் பட்சத்தில் தான் தலைமைப் பதவியை கைவிடுவதாக ரணில் உறுதி அளித்துள்ளார்.

இதேநேரம், கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்த்தன தற்போது நாடளாவிய ரீதியில் கட்சி சார்பாக முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகள் தொடர்பில் ரணில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “அவர் கட்சியின் செயற்பாடுகளை நன்றாக முன்னெடுத்துச் செல்கிறார்” என்று ரணில் ஒரு இடத்தில் கூறியிருக்கின்றார். ஆக, ருவனைச் சுற்றியே தலைமைத்துவம் சுழல்வதாக உட்கட்சித்தகவல்கள் கூறுகின்றன. 

திரசங்கு நிலை
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை ஒருவாறு நிறைவுக்கு வந்திருக்கின்றது. கடந்த 5ஆம் திகதி முதல்; தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. 

ஆனால் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதில் கம்பனிகளுக்கு இன்னமும் சிக்கலான நிலைமை காணப்படுகின்றது. வர்த்தமானி அறிவித்தலில் வேலை நாட்கள் குறித்து எந்த குறிப்பும் இல்லாத நிலையில் கம்பனிகள் வேலை நாட்களை குறைப்பதற்கு முனைப்புக் காட்டி வருகின்றன. 

அத்துடன், பறிக்கப்படும் கொழுந்தின் அளவு மற்றும் தொழிலாளர்களை நிருவாக முறைமைக்குள் கொண்டுவருதல் உள்ளிட்ட சில செயற்பாடகளையும் கம்பனிகள் முன்னெடுப்பதற்கு முயற்சிகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை ஆயிரம் ரூபா சம்பளம் வழங்காத கம்பனிகளுக்கு எதிராக சம்பளக் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவ்வாறு எடுக்கப்படும் பட்சத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்க முடியும் என்றும் தொழில் ஆணையாளர் கூறுகின்றார். 

அதேநேரம், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் முடிவொன்றுக்கு வரமுடியும். ஏற்கனவே கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இருதரப்பும் அறிவித்துள்ள நிலையில் அடுத்த ஒருமாதத்திற்குள் கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் விடப்படவுள்ளது. 

இதற்குள் கூட்டு ஒப்பந்தம் மீண்டும் செய்யப்படுமா தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி விடயங்கள் பாதுகாக்கப்படுமா என்பது தான் தற்போது மீதமாகவுள்ள கேள்வியாகிறது.