திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதனால் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக கிராம வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் குறித்த பகுதியினுள் புகும் காட்டு யானைகள் தங்களது பயிர்செய்கைகளை துவம்சம் செய்து விட்டு செல்வதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வாழை, பலா, தென்னை, கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாதுள்ளதாகவும் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் அச்ச நிலை நிலவுவதாகவும் அம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

அத்துடன் கிராமத்தில் அமைக்கப்பட்ட யானை வேலிகள் உடைந்து சீரற்ற நிலையில் உள்ளதனால் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அதேநேரம் பிரதான வீதியில் இருந்து உரிய கிராமத்துக்கு செல்லும் ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் செல்லும் பாதையின் வீதி மின் விளக்கின்மை காரணமாகவும் இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய இக்கட்டான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.