மத்தியதரைக் கடலில் ஈரானிய கொள்கலன் கப்பலை சேதப்படுத்திய தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேல் இருந்திருக்கலாம் என்று ஈரானிய புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

ஷாஹர் இ கோர்ட் என்ற கப்பல் வெடிக்கும் பொருட்களை கொண்டு வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டது.

இதனால் கப்பலில் சிறிதளவான தீப் பரவல் ஏற்பட்டது. எனினும் கப்பலிலிருந்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள், ஆரம்ப சான்றுகளை முன்வைத்து கப்பல் வேண்டுமென்றே குறிவைத்து தாக்கப்பட்டதாக முன்னர் கூறியிருந்தனர்.

இந் நிலையில் "புவியியல் இருப்பிடம் மற்றும் கப்பல் குறிவைக்கப்பட்ட விதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த பயங்கரவாத நடவடிக்கை சியோனிச ஆட்சியால் (இஸ்ரேல்) முன்னெடுக்கப்பட்டுள்ளது என  இந்த சம்பவத்தை விசாரிக்கும் ஈரானிய  பெயரிடப்படாத புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் சனிக்கிழமை ஆற்றிய உரையாடலொன்றின்போது, இந்த சம்பவம் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சயீத் காதிப்சாதே கூறுகையில், சர்வதேச சட்டத்தை மீறும் நாசவேலை செயலை அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. "இந்த நாசவேலை நடவடிக்கையின் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன," என்றார்.

ஈரானின் அரசு நடத்தும் கப்பல் நிறுவனமான ஐ.ஆர்.ஐ.எஸ்.எல், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறியது.

ஓமான் வளைகுடாவில் இஸ்ரேலுக்க சொந்தமான பஹாமியன் கொடியிடப்பட்ட ஹீலியோஸ் ரே என்ற சரக்குக் கப்பல், மத்திய கிழக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்தபோது ஒரு மர்ம வெடிப்புக்குள்ளான இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.