பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மார்ச் 19 ஆம் திகதி டாக்காவிற்கு புறப்படவுள்ளார்.

அதன்படி மார்ச் 19 காலை 10.30 மணியளவில் டாக்கவைச் சென்றடையும் பிரதமர் சுதந்திர தின நிகழ்வுகளிலும், அந் நாட்டு இராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதன் பின்னர் மார்ச் 20 ஆம் திகதி நாடு திரும்புவார் என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆண்டு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

டாக்காவில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் 15 நிமிட உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 20 அன்று, மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவதோடு, இலங்கைக்கு திரும்புவதற்கு முன்னர் ஜனாதிபதி அப்துல் ஹமீத்தையும் சந்திக்க உள்ளார்.

இந்த நிகழ்வுகளில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பூட்டானிய பிரதமர் லோட்டே ஷெரிங் உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.