நேர்காணல் – வீ. பிரியதர்சன்

உண்மையை மறைக்கும் அரசாங்கம் இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததாக தெரிவித்து, உள்நாட்டில் அதற்கான பொறிமுறையை ஸ்தாபித்து அதற்கு பொறுப்புக் கூறப்போவதில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்டோர் சர்வதேச பொறிமுறையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயற்படுவது கூட துரிதமாக இல்லை. இந்த பொறிமுறைகளுக்கு நாம் சென்றால் கூட உடனடியாக எமக்கு நீதி கிடைக்குமென்றில்லை அல்லது கட்டாயமாக நீதிகிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லையென்றும் குறிப்பட்டார்.

அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையின் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்:- ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பழைய பிரேரணையின் பிரகாரம் அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கையில் பொறுப்புக்கூறல் முறையாக இடம்பெறவில்லையென்றும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இராணுவ மயமாக்கல் அதிகளவில் நடைபெறுவதாகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறக்கூடுமென்ற அறிகுறிகள் தென்படுவதாகவும்  உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வைத்துள்ள பரிந்துரைகளை நாம் அவதானித்தால், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கும் இலங்கையில் உள்ளவர்கள் அதாவது இராணுவம், அரசியலில் உள்ளவர்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்களால் மனித உரிமை மீறல்கள் இழைத்திருக்கக் கூடுமென்று ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக தனிப்பட்ட தடை உத்தரவுகள் அல்லது அவர்களின் வங்கிக்கணக்குகளை முடக்குவதற்கும் அல்லது உடமைகளை கையகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் உறுப்பு நாடுகளைக் கோரியிருந்தார்.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளும் ஒருபுறமிருக்க ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பூச்சிய வரைவு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை நாம் பார்த்தால் அதில் 3 முக்கிய புதிய விடயங்கள் உள்ளன. 

ஐ.நா. உயர்ஸ்தனிகரின் அலுவலகம் ஆதாரங்களை திரட்ட வேண்டும். அதாவது போர்க்குற்றங்கள் , போரின் போது இடம்பெற்ற மனித நேயத்திற்கு எதிராக இடம்பெற்ற மீறல்கள் பற்றிய ஆதாரங்களை திரட்டி அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். 

பொறுப்புக்கூறலில் அடுத்த கட்டம் என்ன ? அதில் என்ன நடைபெறலாம். இவ்வாறான பரிந்துரைகளை உயர்ஸ்தானிகர் ஒன்றரை வருடத்திற்கு பின்னர் பேரவைக்கு முன்வைக்க வேண்டும்.  உயர்ஸ்தானிகரின் அலுவலகம் கண்காணிப்புக்காக பலப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களே புதிதாக இந்தப் பிரரேணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

ஆகையால் இந்தப் பிரேரணையில் பாரதூரமான குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாம் கருத முடியாது. இந்த பிரேரணை யை வலுவான பிரேரணை என்றும் கூற முடியாது.  இந்தப்பிரேரணையில் மிகக்  குறைந்த அளவு உள்ளடக்கம் என்ன இருக்க வேண்டுமோ அவை தான் அதில் உள்ளடங்கியுள்ளன.

ஆகவே  இந்தப் பிரேரணையால் மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கும் என்று நாம் கூற முடியாது.  

கேள்வி:- காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவது பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுப்பணியகம் ஆகிய கட்டமைப்புக்கள் எதிர்காலத்தில் நீக்கப்பட்டால்எவ்விதமான தாக்கங்களை அது ஏற்படுத்தும்?

பதில்:- காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவது பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்ற இரு பொறிமுறைகளும் பொறுப்புக் கூறலுக்காக ஸ்தாபிக்கப்படவில்லை. 

கடந்த நல்லாட்சி அரசாங்கம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய ஒரு நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவது பற்றிய அலுவலகத்தை ஸ்தாபித்த சட்டத்தை நாம் பார்த்தோமானால், குறித்த அலுவலகத்தினர் உண்மையைத் தேடுவது, உண்மையைத் தேடிக் கண்டடைவது. அந்த உண்மையின் அடிப்படையில் நோக்கும் போது குற்றம் இழைக்கப்பட்டதாக ஆதாரங்கள் இருந்தால், அதனை அவர்கள் சட்டமா அதிபருக்கோ அல்லது நீதியை பெறக்கூடிய அல்லது வழக்கை தொடுக்கக் கூடிய, மேலதிகமாக விசாரணையை மேற்கொள்ளக்கூடிய அதிகாரியிடமோ அல்லது பெறிமுறைக்கோ அதனை பாரப்படுத்தலாம். 

இந்த பொறிமுறைகள் வலுவிழந்து போனால் பொறுப்புக்கூறலுக்கு எவ்விதமான பாதகம் ஏற்படாது. காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவது பற்றிய அலுவலகத்தின் தவிசாளராக முன்னாள் நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தவர். தற்போது 3 வருட காலம் நிறைவடைந்த நிலையில், அந்த ஆணைக்குழுவில் தற்போது தவிசாளர் மாத்திரமே உள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கூட கடந்த மாதத்தில் இருந்து வழங்கப்படாது நிறுத்தப்பட்டுவிட்டது.

அந்த அலுவலகம் தற்போது செயற்படுவதாக கூற முடியாது. அது நியமிக்கப்பட்டு 3 வருடங்களில் வேலைக்கு ஆட்களை அமர்த்துவதிலும் கொழும்புக்கு அப்பாலுள்ள மாகாணங்களில் அலுவலகங்களை திறப்பதிலும் காலம் நிறைவடைந்து விட்டது.  இதனால் அவர்களால் பல விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை . இந்த அலுவலகங்கள் செயற்படாது போனாலோ அல்லது வலுவிழந்து போனாலோ பொறுப்புக்கூறலுக்கு பாதகமாகும் என்று நாம் கூறமுடியாது.

கேள்வி:- மனித உரிமைகள் ஆணையாளராக நீங்கள் இருந்த காலப்பகுதியிலும் தற்போதைய காலப்பகுதியிலும்  இலங்கையின் மனித உரிமைகள்  நிலவரம் எவ்வாறு காணப்படுகின்றது ? 

பதில்:- மனித உரிமை நிலைவரம் என்று நாம் சொல்லும் போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்னர் மனித உரிமை நிலைமைகள் மிக மோசமாக காணப்பட்டன. சிவில் சமூகங்கள் இயங்க முடியாது காணப்பட்டன. பேச்சு சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு காணப்பட்டது. இராணுவ மயமாக்கல் போன்ற செயற்பாடுகள் காணப்பட்டன.

அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இராணுவ மயமாக்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இராணுவ மயமாக்கல் பொறிமுறையை இல்லாதொழிக்கவில்லை. நல்லாட்சியின் காலத்தில் கூட பயங்கரவாத தடுப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸார் ஆகியோர் சிவில் சமூக நிறுவனங்களுக்கு சென்று அவர்களை கண்காணித்து தகவல்களை திரட்டுவதாக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

ஆனால் தற்போதைய ஆட்சியில் கண்காணிக்கப்படுவது போன்று அல்ல. நல்லாட்சி அரசாங்கத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் எவ்வித அச்சமுமில்லாது மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்று முறைப்பாடு தெரிவிப்பார்கள். அந்த நேரத்தில் மனித உரிமை ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுத்தது. ஆகையால் இவ்வாறான தொல்லைகள், அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் முற்றுமுழுதாக நிறுத்தப்படவில்லை. 

ஆகையால் தான் தற்போதைய அரசாங்கத்தில் இராணுவ மயமாக்கல் துரிதப்படுத்தப்படுகின்றது. சிவில் சமூகங்களுக்கு எதிரான கண்காணிப்பு அச்சுறுத்தல் மிரட்டல்கள், பயங்கரவாத தடுப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுப்பிரிவினர் ஆகியோர் தகவல் கோருவது, போன்ற தொந்தரவுகள் சடுதியாக அதிகரித்துவிட்டது. இவ்வாறான செயற்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தில் மோசமாக உள்ளது.

தற்போதைய அரசாங்கம் பேரினவாதத்தை இனவாத அரசாங்கத்தின் கொள்கையாக வைத்து அதன் அடிப்படையில் அவர்களின் சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றுவதைப் போன்று செயற்படுகின்றது. சிவில் சமூகங்களை கண்காணிப்பதற்கு புதிய சட்டங்களை அமுல் படுத்துவதாக தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பேச்சு சுதந்திரம், மற்றும் சிவில் நிறுவனங்களின் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வடக்கு கிழக்கிலுள்ள பத்திரிகையாளர்களுக்குகூட தற்போது கடமையை செய்ய முடியாது அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றது. தற்போது மனித உரிமை நிலைவரம் என்பது மிக மோசமாக காணப்படுகின்றது.

இவ்வாறு மோசமாக இருப்பதற்கான காரணம், கடந்த 5 வருட காலம் இருந்த நல்லாட்சி அரசாங்கம் கூட இந்த பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்களுக்கான தீர்வுகளைக் கூட காணவில்லை. ஆகையால் தான் இந்த விதமான மோசமான நிலையில் மனித உரிமை நிலவரங்கள் காணப்படுகின்றன.

கேள்வி :- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்கால நிலை என்ன ? 

பதில்:- நான் மனித உரிமை ஆணைக்குழுவில் இருக்கும் போது சிறைச்சாலைகளைப் பற்றிய ஆய்வொன்றை தேசிய மட்டத்தில் மேற்கொண்டேன். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நாம் சந்தித்து நேர்காணல் மேற்கொண்டு அவர்களின் நிலைவரத்தை பற்றி அறிந்துகொண்டு அதனை அறிக்கையாக கடந்த வருடம் வெளியிட்டோம்.

அந்த அறிக்கையில் நாம் கண்டுபிடித்த விடயம் என்னவென்றால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களில் அனேகமானோர் சரியான சட்ட வழிமுறைகளின் படி கைதுசெய்யப்படவில்லை. அவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள், அவர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியப்படுத்தவில்லை. 

கைதுசெய்யப்படும் போது பற்றுச்சீட்டு ஒன்று வழங்கப்படவேண்டும். கைதுசெய்யப்பட்டமைக்கு சான்றாக அதுவும் கொடுக்கப்படவில்லை. அதன்பின்னர் அவர்கள் தடுப்பாணையின் கீழ் ஒரு நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படாமல் 18 மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள காலத்தில் எத்தனையோ சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு அவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவதற்கு காரணம் அவர்களிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்கு ஆகும். கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்குகளை நோக்கினால் சித்திரவதையின்  ஊடாக பெறப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஆகையால் இவர்களுக்கு சிறைச்சாலைக்குள்ளே எத்தனையோ பாரபட்சங்களை அனுபவித்துள்ளார்கள். அதேவேளை, வெளியில் ஒரு இனவாத அரசாங்கம் ஆட்சிசெய்கின்ற வேளை ஏனைய சிறைக் கைதிகளிடமிருந்தும் மற்றும் சிறை காவலர்களிடமிருந்து அழுத்தங்கள் மற்றும் இனவாத ரீதியில் பாரபட்சங்கள் அனைத்தையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக்கொண்டுள்ளனர்.

கேள்வி:- ஐ.நா. தீர்மானத்திற்கு கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரிப்பதோடு போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் கூறுகின்றதே? 

பதில்:- தற்போதைய அரசாங்கம் இனப்பிரச்சினையொன்று இலங்கையில் இல்லையென்று கூறுகின்றது. அத்துடன் இதுவொரு பயங்கரவாதப்பிரச்சினையென்றும் அதற்கு தீர்வு கண்டுவிட்டதாகவும் கூறிக்கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றது. 

இலங்கையில் யுத்தத்தின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லையென்றும் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகள் என்றும் அது மனித நேயச்சட்டத்தின் கீழ் மீறலாகாதென அண்மையில் அரசாங்கத்தின் அமைச்சரான சரத் வீரசேகரவே கூறியிருந்தார்.இவ்வாறு அமைச்சர் கூறியது நூறு சதவீதம் பிழையான கருத்து. 

ஏனெனில் விடுதலைப்புலிகளுக்கு உதவிசெய்தவர்களை விடுதலைப்புலிகள் என்று கூறமுடியாது. அதாவது மனித நேய சட்டத்தின் கீழ் ஆயுதம் தாங்கி போரிட்டவர்கள் மாத்திரம் போரில் கொல்லப்பட்டால் தான் அது மனித நேயசட்டத்திற்குள் உள்ளடக்கப்படும். அதைத்தவிர காணாமலாக்கப்படுதல் அல்லது ஆயுதம் தாங்கி போரிட்டாலும் அவர்கள் நிராயுதபாணியாக இருக்கும் போது அல்லது சரணடைந்த பின்னர் அவர்களைக் கொல்வது மிகவும் பாரதூரமான போர்க்குற்றம். 

எனவே உண்மையை மறைக்கும் அரசாங்கம் இங்கு போர்க்குற்றம் நடந்ததாக தெரிவித்து, உள்நாட்டில் அதற்கான பொறிமுறையை ஸ்தாபித்து அதற்கு பொறுப்புக் கூறப்போவதில்லை. ஆகையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த சர்வதேச பொறிமுறைகளை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. 

அதேநேரம் சர்வதேச பொறிமுறைகூட மனித உரிமைப் பேரவையை எடுத்துக்கொண்டாலோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எடுத்துக்கொண்டாலோ அவர்கள் கூட நூறு சதவீதம் மிகவும் நேர்த்தியாக செயற்படப்போவதில்லை. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இதுவரைக்கும் 9 பேரை மாத்திரமே அவர்கள் குற்றவாளிகளாக கண்டுள்ளனர்.

ஆகையால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயற்படுவது கூட துரிதமாக இல்லை. இந்த பொறிமுறைகளுக்கு நாம் சென்றால் கூட உடனடியாக எமக்கு நீதி கிடைக்குமென்றில்லை. அல்லது கட்டாயமாக நீதிகிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லை. 

ஏனென்றால் இந்த பொறிமுறைகள் கூட நேர்த்தியான பொறிமுறைகளில்லை . இலங்கைக்கு என்ன தாக்கம் கிடைக்குமென்றால் உலகநாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தினால் இராணுவத்தளபதிக்கு அமெரிக்கா தடையுத்தரவு விதித்தது போன்ற  தடையுத்தரவுகள், மற்றும் அவர்களின் சொத்துக்கள் வெளிநாடுகளில் காணப்பட்டால் அவற்றை முடக்குவது, கையகப்படுத்துவது தனிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தும். பாரதூரமான குற்றங்கள் சட்டப்பட்டால் உலக நாடுகள் எந்த நாட்டிலும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். 

தற்போது ஜேர்மனியில் சிரியாவில் போர்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது. அந்த வழக்கில் கூட உலகளாவிய ரீதியில் சில குற்றங்களுக்கு எதிராக அனைத்து நாடுகளும் உள்நாட்டில் நடவடிக்கை எடுக்கலாம் என்ற வழிமுறையை உலக நாடுகள் பயன்படுத்த தொடங்கும் போது, குற்றம் சட்டப்பட்டவர்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாது. 

அவ்வாறு பயணித்தால் அவர்கள் கைதுசெய்யப்படக்கூடும். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படலாம். இந்த மாதிரியான வழிமுறைகளை பாவித்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பாரதூரமான தாக்கங்களை இது ஏற்படுத்தும். ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு போவது இன்றைக்கு நாளைக்கு நடைபெறும் விடயமல்ல. 

பூகோள அரசியல் நிலைவரத்தை பாரத்துக்கொண்டால் அல்லது மனித உரிமை பேரவை செயற்படுவதை பாரத்துக்கொண்டால் எத்தனை காலமெடுக்கும் ஒரு வழிமுறையாகத்தான் தெரிகின்றது.

கேள்வி:- இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களை எதிர்காலத்தில் உருவாக்கும் வாய்ப்புள்ளதா ? பொருளாதாரத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவுகளை இலங்கை காண்பித்தாலும் இலங்கையின் ஜனநாயகத்தில் அந்த உறவுகள் எவ்வாறான ஆதிக்கம் செலுத்தும் ?

பதில்: - பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பிரச்சினை வரும்போது சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று நிதியுதவி கேட்காது சீனாவிடம் இருந்து கடன் கிடைக்கும் போது நாம் மேற்கத்தேய நாடுகளுக்கு சென்று கடனுதவி பெறத் தேவையில்லை.

நாம் போனால் அவர்கள் நிபந்தனைகளுடன் எமக்கு கடன் வழங்குவார்கள். ஆகையால் நாம் சீனா போன்ற நாட்டின் உதவியை நாடினால் உள்நாட்டில் நாம் விரும்பியதை மேற்கொள்ள முடியமென்று எண்ணி விடுவாவர்கள். இவ்வாறான ஒரு எதிர்மறையான தாக்கம் இருக்க வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனநாயகத்திற்கு மாறாக நடக்கும் போதும் , மனித உரிமைகளை மீறி அவற்றை நியாயப்படுத்தும் போது இலங்கை போன்ற நாடுகளுக்கும் அது பெரும் ஊக்கத்தை அளிக்கக்கூடும்.

நீங்களும் எம்மைப்போன்று செயற்படலாம் செயற்பட்டாலும் எமக்கு அந்த நாடுகளின் அடைக்கலம் கிடைக்கும். இந்தியாவுடன் வேறு வேறு பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டு இருப்பதால் தான் இந்தியாவும் தற்போது அறிக்கையொன்றை விடுத்துள்ளது. 

தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அரசியல் யாப்பிற்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.போன்ற விடயங்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஆனால் மனித உரிமைப் பேரவையை பாரத்தோமானால் இலங்கைக்கு தான் எமது ஆதரவு உள்ளது என சீனா வெளிப்படையாக கூறுகின்றது. 

மனித உரிமைப் பேரவையில் இலங்கை தெரிவிப்பதை செவிமடுக்க வேண்டுமெனவும். பூச்சிய வரைபில் மனித உரிமைகள் குறிப்பட்டுள்ள சில பரிந்துரைகளை நீக்க வேண்டுமென சீனா வெளிப்படையாக தெரிவிக்கின்றது. இவையனைத்தும் பூகோள அரசியலில் வெவ்வேறு பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

இலங்கைக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் இருக்கும் உறவுகள் வெவ்வேறு வழியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறலாம் . இவ்வாறான பிரச்சினைகள் இலங்கையின் ஜனநாயகத்திலும் பொறுப்புக் கூறலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.