13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டமைக்கான இலக்குகள் இதுவரையில் அடையப்படவில்லை - வெளிவிவகார செயலாளர் கொலம்பகே 

14 Mar, 2021 | 05:44 AM
image

 இந்திய தூதுவராக மொரகொட பதவி ஏற்பார்

 புதிய அரசியலமைப்பு நிச்சியம் உருவாக்கப்படும்

 துறைமுகங்களில் வெளிநாட்டு படைகளுக்கு அனுமதி இல்லை

கடந்த கால கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதோடு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான இலக்குகள் அடையப்படவில்லை. இந்நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் அட்மிரல்.பேராசிரியர்.ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கை தூதுவராக மிலிந்த மொரகொட விரைவில் பொறுப்பேற்கவுள்ளதோடு, அமைச்சரவை அந்தஸ்துடன் அவர் செல்ல வேண்டுமென ஜனாதிபதியே அதிக விருப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது 13ஆவது திருத்தச்சட்டம், இந்தியாவுக்கான தூதுவர் மற்றும் சீனாவின் ஒரேபட்டி ஒரே பாதை திட்டத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு,

கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கப்படவுள்ளதா?

பதில்:- இந்தியாவின் தலையீட்டின் காரணமாகவே 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் வன்முறையை நிறுத்துவதற்கும்ரூபவ் மாகாணங்களை முன்னேற்றுவதற்கும் முடியும் என்றே இந்தியா கருதியது. துரதிஷ்டவசமாக அந்த இலக்குகள் அடையப்படவில்லை. பின்னர் அரசாங்கத்தின் முயற்சியால் தான் அந்த இலக்குகள் அடையப்பட்டன.

மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் அரசாங்கத்தினால் வழங்க முடியாது. ஆனால் அதிகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டு மாகாண சபைகள் வினைத்திறனாக செயற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அதேநேரம், தற்போதைய அரசியலமைப்பானது 20 தடவைகள் திருத்தப்பட்டு விட்டது. ஆகவே புதிய அரசியலமைப்பொன்று அவசியமாகின்றது அந்த அரசியலமைப்பானது கடந்த காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக கொண்டதாகவே அமைய வேண்டும். மீண்டும் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் அது அமைய வேண்டும்.

கேள்வி:- இந்தியாவுக்கான இலங்கைத்தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட பதவியை ஏற்றுக்கொள்வதில் உள்ள தாமதங்கள் என்ன? 13ஆவது திருத்தம் தொடர்பான அவருடைய நிலைப்பாடு தாமதங்களுக்கு காரணமாகின்றதா?

பதில்:- எனக்கு தெரிந்தவரையில் 13ஆவது திருத்தம்தொடர்பிலான அவருடைய நிலைப்பாடு எவ்விதமான செல்வாக்கையும் செலுத்தவில்லை. இந்தியா அவருடைய நியமனத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் சில செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி வருகின்றார். ஆகவே மிக விரைவில் அவர் டெல்லிக்கு சென்று பதவிகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கேள்வி:- அமைச்சரவை அமைச்சருக்கான சிறப்பு அந்தஸ்துடன் செல்கின்றாரா?

பதில்:- இதற்கு முன்னதாக எந்தவொரு நாட்டிற்கான தூதுவருக்கும் அவ்விதமான சிறப்புரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் மிலிந்த மொரகொட தனித்துவமான நபர் என்பதனால் ஜனாதிபதியே அவ்விதமான சிறப்புரிமையுடன் அவரை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்திருந்தார். அதுதொடர்பான கோரிக்கையும் இந்தியாவிடத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- சீனாவின் ஒரேபட்டி ஒரே மண்டலம் முன்முயற்சியின் பங்காளராக இலங்கை இருக்கும் அதேநேரம் அயல்நாடான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளில் எவ்வாறு சமநிலைத் தன்மையை நிலையாக பேணத்திட்டமிட்டுள்ளது?

பதில்:- இலங்கையைப் பொறுத்தவரையில் அடுத்த நூற்றாண்டில் கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தகமே பிரதான வருமானம் ரூடவ்டுட்டும் வாயிலாக இருக்கப்போகின்றது. அவ்வாறான நிலையில் சீனாவின் ஒரே பட்டி ஒரேபாதை முன்முயற்சித் திட்டத்தினை புறமொதுக்கி விட முடியாது. அதில் பங்குதாரராக இருக்க வேண்டியது கட்டாயமாகின்றது. அதேநேரம், இந்து சமுத்திரப்பிராந்திய கடற்போக்குவரத்தில் மூன்று சர்வதேச துறைமுகங்களைக் கொண்ட கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுகின்றது.

ஆகவே இந்தப் பிராந்தியத்தின் கடற்போக்குவரத்து பதையின் கேந்திரமாக இலங்கை காணப்படுகின்றது.இந்த நிலைமையை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவேண்டியது தவிர்க்க முடியாததாகின்றது. அதற்காக அயல்நாடான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை புறமொதுக்குவதாக கருதமுடியாது. இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப்பகுதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டுப் படைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படமாட்டாதுஎன்பது திடமான விடயமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right