(எம்.மனோசித்ரா)

இந்தியாவின் 'அயல் நாட்டுக்கு முதலிடம்' என்ற கொள்கைக்கமைய இலங்கையின் முக்கியத்துவத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இந்தியா மற்றும் இலங்கை தலைவர்களுக்கிடையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியதாக இந்திய பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.

இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு மற்றும் தரப்பு அபிவிருத்திகள் , ஒத்துழைப்புக்கள் என்பவை தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் சவால்களுக்கு மத்தியில் இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை தடையின்றி தொடர்வதற்கு இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். அத்தோடு இந்தியாவின் 'அயல் நாட்டுக்கு முதலிடம்' என்ற கொள்கையினடிப்படையில் இலங்கையின் முக்கியத்துவத்தை பாரத பிரதமர் மோடி இதன் போது வலியுறுத்தியுள்ளார் என்று இந்திய பிரதமர் அலுவலம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ,

' ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடினேன். கொவிட்-19 நிலைமை உட்பட ஏனைய இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன் போது கலந்துரையாடினோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.