தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியாகியது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்டு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடபட்டுள்ள ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் , பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக வருமாறு :

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரணடைந்தோருக்கும் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோருக்கும் புனர்வாழ்வளிக்கும் ' மீள் ஒன்றிணைத்தல் நிலையங்கள்' என்பவற்றை காலத்துக்கு காலம் அங்கீகரிக்க வேண்டும். 

அத்தகைய அங்கீகாரத்தின் அடிப்படையில் புனர்வாழ்வு ஆணையாளரால் அதற்கான இடங்கள் குறித்துரைக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் அல்லத சரணடைபவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் உரிய அதிகாரிகளால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். 

இவ்வாறானவர்கள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அமைச்சருக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் புரியப்படும் தவறின் தன்மைக்கு ஏற்ப குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கு பதிலாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று சட்டத்துறை கருதும் பட்சத்தில் , அவர் நீதவானொருவரிடம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். 

அதனையடுத்து இவை தொடர்பில் ஆராய்ந்து கைது செய்யப்படும் நபர்களை புனர்வாழ்க்கு உட்படுத்த முடியும் என்று நீதவான் தீர்மானித்தால் ஒரு ஆண்டை மீறாத வகையில் புனர்வாழ்வளிப்பதற்கான கட்டளையை பிறப்பிக்கலாம்.

இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்படுபவர்களை விடுதலை செய்தல் , அதன் பின்னர் அவர்களை சமூகமயப்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குதல் , புனர்வாழ்வு காலத்தின் போது இருவாரங்களுக்கொருமுறை உறவினர்களை பார்வையிட வாய்ப்பளித்தல் , உள்ளிட்டவை தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் காணப்படுகின்றன.

இவ் வர்த்தமானி அறிவித்தலில் சட்டம் என்பது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் என்பதை அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை புனர்வாழ்வு ஆணையாளர் தலைமையபதி என்பவர் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட புனர்வாழ்வு ஆணையாளர் ஆவார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர் என்பது பாதுகாப்பு துறையினரின் கட்டுக்காப்பினுள் எடுக்கப்படுபவர்கள் என்பதோடு , அமைச்சர் என்பது பாதுகாப்பு அமைச்சரையே குறிக்கிறது