புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

களுத்துறை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அமைச்சரால் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் கடந்த வாரம் இடம்பெற்றது. 

இதன் போது கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற விவாதத்தின் போது தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புர்காவை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் சிலவற்றை அடையாளம் கண்டுள்ளதுடன், அவற்றில் பிரதானமாக புர்காவை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் , அது குறித்த யோசனையிலும் தான் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.