யோகி பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் 'மண்டேலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'மண்டேலா'. இப்படத்தில் முன்னணி கொமடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இவர் சலூன் கடைக்காரராக அதாவது சிகை அலங்கார நிபுணராக நடித்திருக்கிறார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு, பரத் சங்கர் இசை அமைத்திருக்கிறார்.

இயக்குனரும், நடிகருமான பாலாஜி மோகன் மற்றும் தயாரிப்பாளர் சசிகாந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் யோகி பாபுவின் கண்களுக்கு வேறு ஒரு மாயமான உலகம் காட்டப்படுவதாகவும், அவரது சட்டைப் பையிலிருக்கும் வாக்காளர் அடையாள அட்டை‌ மற்றும் சலூன் கடையில் முடி திருத்துவதற்காக பொருத்தப்பட்டிருக்கும் விலைப்பட்டியல் என்பவை மதிப்பிழந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ளூர் அரசியலும், தேசிய அரசியலும் கலந்திருப்பதாக இணையவாசிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

'மண்டேலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இந்த திரைப்படம் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிப்பில் உருவான 'ஏலே' பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானதைப்போல், இந்த திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் திகதியன்று விஜய் ரிவியில் நேரடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே  சுந்தர் சி தயாரிப்பில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த 'நாங்க ரொம்ப பிஸி' என்ற திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.