(எம்.ஆர்.எம்.வசீம்)

மாகாணசபைகளுக்கு சொந்தமான நிறுவனங்களை அரச அதிகாரிகளுக்கு கீழ் கொண்டுவந்து நிர்வகிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி மக்கள் பிரதிநிதிகளை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் மாகாணசபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை  அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சி கண்டி மாவட்ட தலைவி சாந்தினி கோன்காகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தலை நடத்தி அதற்கான மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அரசாங்கம் மாகாணசபைக்கு உரித்தான நிறுவனங்களின் நிர்வாகத்தை அரச அதிகாரிகளுக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகின்றது. மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படவேண்டிய நிறுவனங்களை அரச அதிகாரிகளை நியமித்து, அரசாங்கத்துக்கு தேவையான முறையில் இதன் நிர்வாகத்தை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.

அதனால் மாகாணசபை தேர்தலை நடத்துவதை தொடர்ந்தும் காலம் கடத்தாமல் விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். அத்துடன் மாகாணசபையில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 25வீதமாக அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றையும் கட்சியின் பெண்கள் அமைப்பு நிறைவேற்றி இருக்கின்றது. சர்வதேச பெண்கள் தினத்திலே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 

மேலும் 2017ஆம் ஆண்டு பிரதேச சபை தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு 25 வீத கோத்தாபயவை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசிய கட்சியாகும். அதேபோன்றதொரு பிரேரணையை மாகாணசபையிலு உள்வாங்க மாகாணசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் பிரேரித்திருக்கின்றோம்.

அத்துடன் நாட்டின் வாக்காளர்களில் 56 வீதமானவர்கள் பெண்களாகும். என்றாலும் தற்போது பாராளுமன்றத்தில் 12 பெண் உறுப்பினர்களே இருக்கின்றனர். அது பாராளுமன்ற உறுப்பினர்களில் 5வீதமாகும். அதில் 4 பேர் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் பிரதேசசபை போன்று மாகாணசபை மற்றும் பாராளுமன்றங்களுக்கு பெண்களின் பிரதிநிதித்துவத்தை வாக்காளர்களினாலேயே அதிகரிப்பதற்கு, கிராம மட்டத்தில் பெண்களை தெளிவூட்டும் நடவடிக்கையை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.