(செ.தேன்மொழி)

அரசாங்கத்தின் சீனிக்கொள்ளை வரலாற்றில் பேசப்படும். இந்த கொள்ளையூடாக நாட்டு மக்களின் வரிப்பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், நாம் அருந்தும் தேநீருக்கு கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

முறைப்பாடு அளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களித்திற்கு வந்திருந்த காவிந்த ஜயவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,

நாம் சிறுவயதில் அந்தரே சீனி உண்ட கதையை கேட்டுள்ளோம். அதில்  'உனது வாயிலும் சீனி எனது வாயிலும் சீனி ' என்று அந்தரே கூறியிருப்பார்.

அதேபோன்று தற்போதைய அரசாங்கம் 'உனது வாயிலும் சீனி எனது வாயிலும் சீனி ' என்றுக் கூறிக்கொண்டு தனது சகாக்களுக்கு கொள்ளையிடுவதற்கு வாய்ப்பளித்து வருகின்றது.

பட்டபகலில் மத்தியவங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது செய்வதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் தற்போது தங்களது சகாக்களுடன் இணைந்து சீனி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதுடன் , 15 மில்லியன் ரூபாய் பணம் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளது. 

சாதாரண மக்களின் வரி பணத்தை கொள்ளையிட்டமை மட்டுமன்றி நாம் அருந்தும் தேநீருக்கு தலையீட்டை செய்துள்ளது. நாட்டு மக்களின் வரிப்பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அத்தகைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காது இருப்பது தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்.

எதிர்க்கட்சி முறைப்பாடு அளிக்கும் வரையில் காத்திருப்பதில் அவசியமில்லை. அதற்கு முன்னரே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இந்த 15 மில்லியன் ரூபாய் பணம் இருந்திருந்தால் அவற்றுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும்.

அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கியிருக்கலாம். இந்நிலையில்  அந்தரவின் சீனிக் கதை எவ்வாறு வரலாற்றில் இடம்பிடித்துள்ளதோ , அதே போன்று தற்போதைய அரசாங்கத்தின் சீனி கொள்ளை தொடர்பான கதையும் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றார்.

கேள்வி : முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்குள் வைத்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: இந்த புகைப்பட விவகாரம் தொடர்பான முழு விபரமும் எனக்கு தெரியாது. எனினும் நாட்டின் சட்டவிதிகளுக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டே செயற்படவேண்டும்.

கேள்வி : இந்த புகைப்பட விவகாரம் காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மேலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஏதும் கூறவிரும்புகின்றீர்களா ?

பதில்: ரஞ்சன் ராமநாயக்க என்பவர் எப்போதுமே நேர்மையான ஒரு தலைவர். அவர் நீதியின் பக்கம் நின்று செயற்பட்டவர். தற்போது அவருக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது. இந்நிலையில் மேலும் அவருக்கு தண்டனைகளை அதிகரிப்பது முறையற்ற செயற்பாடாகும். நேற்று முன்தினம் அவருடைய பிறந்ததினம் என்ற போதிலும் எம்மால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்ககூட முடியாமல் போனது. அதனால் அவர் தொடர்பில் சிறிது விட்டுக் கொடுப்புடன் சிந்திக்க வேண்டும். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி என்றவகையில் நாம் எப்போதும் அவருக்கு ஆதராகவே செயற்படுவோம்.

(படப்பிடிப்பு : தினேத் சமல்க)