(செ.தேன்மொழி)

பாணந்துறை - பொல்கொட பகுதியில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்டப்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

பாணந்துறை - பொல்கொட பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அண்மித்த பகுதியில் வியாழக்கிழமை (11-03-2021 ) பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 8 எரிவாயு சிலிண்டர்களும் , 45 மதுபான போத்தல்களும் , 59 கோடாக்களும் (பீப்பாய்களும் ) கைப்பற்றப்பட்டுள்ளன. பொல்கொட குளத்தை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு சட்டவிரோதமாக  பல மதுபான உற்பத்தி நிலையங்கள் இயங்கிவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் , அது தொடர்பில் வலானை ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.