(எம்.ஆர்.எம்.வசீம்)

இடம்பெற்றுவரும் நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைப்புக்குள் குழந்தை பராமரிப்புக்கு தேவையான வசதிகளை செய்ய முன்னுரிமை வழங்குவேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

கொரோனவுடன் இனவாத வைரஸையும் கட்டுப்படுத்தவேண்டிய நிலை: அலி சப்ரி | Virakesari .lk

நீதிமன்றங்களுக்கு குழந்தைகளுடன் செல்லும் தாய்மார் எதிர்கொள்ளும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நீதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டவந்திருந்த விடயத்துக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாய்மார்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமான தாய்ப்பால் கொடுக்கும் விடயம் தொடர்பாக நீதிமன்ற கட்டமைப்பில் எந்த வசதிகளும் இல்லாமை  காரணமாக, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமம் தொடர்பாக எனது  கவனத்திற்குக் கொண்டுவந்ததற்காக  ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

தாய்மையின் முக்கியத்துவத்திற்கு என்னால் ஒரு விலை மதிப்பை வைக்க முடியாது, அதன்படி எந்தவொரு தாயும் தங்கள் குழந்தைக்கு உணவளிக்க வேண்டிய அவசியம் காரணமாக நீதிமன்றங்களுக்கு வருவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை. எந்தவிதமான விமர்சனமும் அல்லது தடையும் இல்லாமல் நீதியை அணுகுவதை உறுதிப்படுத்த நான் உறுதியாக இருக்கிறேன்.

அத்துடன்  நீதிமன்ற கட்டமைப்பு நிர்வாகத்துக்குள்  குழந்தை பராமரிப்புக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.  

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நான் கடமைப்பட்டுள்ளேன். தற்போது நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற கட்டமைப்பு மறுசீரமைப்புக்குள் இதற்கு முன்னுரிமை வழங்குவேன் என்பதை  உறுதியளிக்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.