(செ.தேன்மொழி)

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் இரு வாரங்கள் வரை பார்வையிடுவதற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

நீதிமன்றத்தை அவமதித்தாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் இரு வாரங்களுக்கு உறவினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதி தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அண்மையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள , ரஞ்சன் ரமநாயக்கைவை பார்வையிட சென்றபோது , அவருடன் இணைந்து 'செல்பி ' புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தலங்களிலும் வெளியிட்டிருந்தார்.

சிறைச்சாலையின் சட்டவிதிகளுக்கமைய இது குற்றச் செயற்பாடு என்பதினால் அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 72 ஆவது சரத்துக்கமைய , இன்று வியாழக்கிழமை சிறைச்சாலையில் ஒழுக்காற்று பிரிவில் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சிறைச்சாலை அத்தியட்கரின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணைகளின் போது ரஞ்சன் ராமநாயக்க தனது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 78 ஆவது சரத்துக்கமைய , விசாரணைகளை நடத்திய அத்தியட்டகர் ரஞ்சன் ராமநாயக்வை எதிர்வரும் இரு வாரங்களுக்கு உறவினர்களை சந்திப்பதற்கு தடைவிதித்துள்ளார்.