திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு, ஜெயபுரம், பத்தினிபுரம் பகுதிகளை அண்டிய கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக்கோரியும் காட்டு யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும் கோரியும் இன்று (11.03.2021) கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பத்தினிபுரம் பகுதியில் இருந்து குப்பை மேட்டினை நோக்கி சென்றதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள். 

குப்பைகளை அகற்று, யானை தொல்லையில் இருந்து பாதுகாக்க யானை வேலி அமைத்துத்தருமாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். பல வருட காலமாக இக் குப்பை மேட்டு தாக்கம் காரணமாக ஒரு வகை நோய் , துர்நாற்றம் என்பன ஏற்படுவதாகவும் இவ்வீதி ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

தம்பலகாமம் பிரதேச சபை மூலம் கொட்டப்படும் கழிவுகளினால் இவ்வாறான தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும்  பல முறை உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும் எவ்வித சாதகமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர். 

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.