(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கைகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச எடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொழில் நிமித்தமாக சென்ற இலங்கையர்கள், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தாய் நாட்டுக்கு வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்களை இழந்துள்ளதுடன், பல்வேறுபட்ட நோய்த்தாக்கம் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பிரச்சினைகளால் தாயகம் திரும்ப முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்துக்குக்கான விஜயத்தின் ஓர் அங்கமாகவே, அமைச்சர் நாமல் ராஜபக்ச இலங்கை தூதரகத்தில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை சந்தித்திருந்தார்.

இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களில் தாய் நாட்டுக்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்கான விமானப்பயணச்சீட்டுக்களை அமைச்சர் நாமல் ராஜபக்ச  வழங்கியிருந்ததுடன், அதற்கான நடவடிக்கைகளை சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.