இந்தோனேஷிய தீவான ஜாவாவில் புதன்கிழமை இரவு பாடசாலை மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஜாவா மாகாணத்தின் சுமேதாங் நகருக்கு அருகிலுள்ள பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக தேடல் மற்றும் மீட்பு பிரிவினர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விபத்தில் 39 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயங்களுக்குள்ளானவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.