இலங்கை - இந்தியாவுக்கிடையிலான சமகால உறவு குறித்து தெளிவுபடுத்தியது இந்தியா

11 Mar, 2021 | 08:33 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

 ஜெனிவா விடயத்தை கூர்மையாக அவதானிக்கின்றோம்

 அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இலங்கையை பலப்படுத்தும்

 மீனவர்களின் உயிர்கள் கடலில் பலியாவதை அனுமதிக்க இயலாது

இலங்கை இந்திய நட்பிற்கு வானமே எல்லையாகின்றது. எனவே இருதரப்பு நீண்டகால, ஆழமான வேரூன்றிய மற்றும் பன்முக நாகரிக உறவுகளைப் பார்க்கும்போது, இலங்கையுடனான இந்திய உறவுகளை வேறு எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க டெல்லி விரும்பவில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யின் செவ்வி வருமாறு :

கேள்வி - தற்போதைய நிலைமையில் இலங்கை - இந்தியா உறவை எவ்வாறு காண்கிறீர்கள் ?

பதில் - இந்திய-இலங்கை உறவு என்பது நாகரிகத்தின இரட்டையர்களாகவே கருத முடிகிறது. மதங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையை இரு தரப்புமே ஒரே மாதிரி கொண்டுள்ளது. மேலும் ஜனநாயகத்தின் மீதான பார்வை, பொருளாதார சூழல் மற்றும் புவிசார் மூலோபாயம் போன்றவற்றிலும் நாம் ஒத்திசைத்து செயற்படுகின்றோம். இரு தேசங்களினது மக்களின் உறவுகளும் வலுவாகவுள்ளது. இந்த பொதுவான பன்முகதன்மைகள் இலங்கை - இந்திய உறவின் உறுதியான அடித்தளத்தை வெளிப்படுத்தாகவே கருதுகிறேன்.

இந்தியாவின் “ அண்டை நாடு முதலிடம்” கொள்கையில் இலங்கை தனிச்சிறப்பிடத்தில் உள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியல் ரீதியான சிறந்த உறவில் இன்னும் அதீத பொருளாதார உள்ளடக்கத்தையும் கைக்கொள்ள வேண்டியது தேவையாகிறது. இது நிச்சயமாக இரு நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும். கொவிட்-19 தொற்று நோயின் போது நம் நெருக்கமான ஒத்துழைப்பின் நன்மைகள் நிரூபமானது. எனவே நம் கூட்டு எதிர்காலம் மிக நம்பிக்கைக்குறியதாகவே உள்ளது. அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த முயற்சிகளால் இரு தரப்பின் உறவில் வானமே எல்லையாக கொள்ளலாம்.

கேள்வி - பாக்கிஸ்தான் பிரதமரின் கொழும்பு விஜயத்தை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் - பிற நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்க கூடிய இருதரப்பு உறவுகள் என்பது இலங்கையின் தனிப்பட்ட விடயமாகவே கருத முடிகின்றது. ஆனால் சிறந்த நண்பர்கள் மற்றும் அண்டை நாடுகள் என்ற வகையில், இந்தியாவும் இலங்கையும் நம் இருவரின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், வளர்ச்சி நலன்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குரல்களுக்கு இடமளித்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்த கூட்டாண்மை, இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் காணப்படும் நமது சமூகங்களின் ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்துவதோடு நமது பரஸ்பர நலன்களையும் குறிப்பாக பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை பலப்படுத்துகிறது.

கேள்வி - கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்தமை தொடர்பில் இலங்கை விளக்கியுள்ளதா? இதனால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அல்லது முன்மொழியப்பட்ட பிற இந்திய திட்டங்களின் எதிர்காலம் எவ்வாறாக அமையும்?

பதில் - இலங்கை , இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களின் ஒத்துழைப்பில் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தில் 2019 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டோம். இந்த ஒப்பந்தம் கொண்டிருக்க கூடிய சர்வதேச உறுதிப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளோம். இலங்கை தலைமை தரப்பிலிருந்து இந்தியா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட முடியும் என்பதை உறுதியாக நம்புவதாக வந்த அறிக்கையை வரவேற்கிறோம்.

மேலும் துறைமுகம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களை இலங்கையில் செயல்படுத்த இந்தியா ஈடுபாட்டுடனே உள்ளது.

கொழும்பிலிருந்து மீளேற்றுமதி செய்வதில் பெரும் பகுதி இந்தியாவுடன் நடைபெறுகிறது என்பதும் உண்மையாகும்.

கேள்வி - கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மை என்ன ?

பதில் - மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய தனியார் முதலீட்டாளருக்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது, இலங்கை சட்டத்தின்படி பொருத்தமான செயல்முறைகள் முன்னெடுக்கப்படுவதாகவே அறிகிறேன்.

கேள்வி - திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியா இலங்கைக்கு மீள வழங்குமா ?

பதில் - இலங்கை எரிசக்தி அமைச்சரின் அண்மித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அதாவது பரஸ்பர புரிந்துணர்வுக்கு இணங்க ஒரு கூட்டு முயற்சியாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதாக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். எனவே இந்த கூட்டு முயற்சி ஊடாக இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பெறும்.

கேள்வி - இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினையை தீரப்பத்தில் இந்தியா கொண்டுள்ள திட்டம் என்ன ?

பதில் - பாக்கு நீரிணை இரு நாட்டிற்கும் பொதுவான கடல் மற்றும் கலாச்சார வளமாகும். பல தசாப்பத காலமாக இரு நாட்டு மீனவர்களும் இங்கு மீன்பிடித்து பயனடைந்துள்ளனர். 

எனவே இங்குள்ள மீனவப் பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கிடையில் புரிதல்கள் உள்ளன. எனவே அதன்ஊடாக பிரச்சினைகளை தவிர்ப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது.

கடலில் மதிப்புமிக்க மீனவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கடலில் இறந்த விசாரணை முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். மறுபுறம் மீன்பிடி சமூகங்களின் நலனுக்காக மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றவும் இந்தியா தயாராக உள்ளது.

கேள்வி - காங்கேசன்துறை மற்றும் காரைக்கல் இடையே படகு சேவை எப்போது ஆரம்பிக்கப்படும் ? அதே போன்று பாலாலிக்கான விமான சேவைகளை ஆரம்பித்தல் புதிய இணைப்பு திட்டங்கள் ஏதேனும் உள்ளதா ?

பதில் - இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்பினை மேம்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். பல நூற்றாண்டுகள் பழமையான படகு சேவைகளை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலா மற்றும் சிறிய அளவிலான வர்த்தகத்தை இரு வழிகளிலும் எளிதாக்குவதற்கும், இரு நாட்டு மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு உறுதியான வழியாகவே இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இது சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்கவும் உதவும்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துரை துறைமுகத்தை இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகிலுள்ள காரைக்கலுடன் இணைக்கும் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதேபோல், கொழும்பு - தூத்துக்குடி இணைப்பிற்கான வாய்ப்பும் உள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை 45. 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் இந்தியாவுடனான திட்டமிடப்பட்ட விமானங்களுக்காக இலங்கை தனது வான்வெளியை மீண்டும் திறக்கும்போது, பலாலிக்கான விமான சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பிக்கும்.

கேள்வி - கருணா அம்மான் மற்றும் பிள்ளயான் ஆகியோருடனான சந்திப்பு குறித்து கூற இயலுமா ?

பதில் - வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அந்த சந்திப்புகள் அமைந்தன. இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலங்கையின் பல்வேறு பங்குதாரர்களுடன் தொடர்பில் உள்ளது.

இந்த வகையில் குறித்த சந்திப்பு கோரப்பட்டமையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது. 

கேள்வி - 13 வது திருத்த அமுலாக்கம் இலங்கைக்கு எவ்வாறு பயனளிக்கும் என இந்தியா கருதுகிறது?

பதில் - தெற்காசியா பிராந்திய அமைதி மற்றும் நல்வாழ்வை இந்தியா என்றும் குறித்து நிற்கும். இலங்கை எங்கள் நெருங்கிய நண்பர் மற்றுமல்ல அண்டை நாடும் கூட. அந்த வகையில் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும். இன நல்லிணக்கத்தை ஊக்குவித்தலை உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் நல்லிணக்க செயல்முறையை நாங்கள் ஆதரிப்போம்.

தமிழர்கள் உட்பட இலங்கையில் அனைத்து சமூக பிரிவினரும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான அபிலாஷைகளை அடைவது இலங்கைக்கு பலம் அளிக்கும். எனவே, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையில் நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டை பலப்படுத்தவும் உதவும் என்றே இந்தியா நம்புகிறது.

கேள்வி - மலையகத்திற்கான இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் என்ன ?

பதில் - இலங்கைக்கு இந்தியா வழங்கும் மிக விரிவான அபிவிருத்தி கூட்டுத்திட்டத்தில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் முக்கியமானதொன்றாகிறது. அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்களில் கூட புதிய அரசாங்கங்கள் இந்த வீட்டுத்திட்டத்தின் மீதான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. மலையகத்திற்காக ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 4 ஆயிரம் வீட்டுத்திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பாராத பிரதமர் மோடி அறிவித்ததது போன்று மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலையகத்தில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

150 வதிவிட சிகிச்சை வசதிகளை கொண்ட டிக்கோயா ஆரம்ப மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கியிருந்தது. இதனோடு 1990 ஆம்புலன்ஸ் சேவையும் இலங்கையில் நெருக்கடி மிக்க பிராந்தியத்தில் மிகவும் தேவையான சுகாதார சேவையை வழங்குகிறது. இவ்வாறான திட்டங்கள், குறித்த மலையக இளைஞர்களின் மருத்துவ திறன் வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகின்றது.

கண்டி - புஸ்சல்லாவை சரஸ்வதி கல்லூரியின் மேம்படுத்தல் பணிகளை அண்மையில் முழுமைப்படுத்தினோம். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்தை மேம்படுத்தும் பணியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது . 300 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் ஒன்பது தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு கல்வி மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வகையான திட்டங்கள் தொடரும்.

கேள்வி - சுனாமி , எம்.டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து மற்றும் கொவிட் தடுப்பு போன்ற அனைத்து அவசர தேவைகளின் போதும் இந்தியா உடனடி ஒத்துழைப்புகளை வழங்கியதை அறிவோம். ஆனால் பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கைக்கு மீள பெறக்கூடிய நாணய மாற்றத்தை ஏன் கொடுக்கவில்லை?

பதில் - இலங்கையின் பொருளாதார உந்து சக்திக்காக கடந்த ஆண்டு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருந்தது. மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதல் தொகையாக இலங்கை தரப்பினால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுகிறது.

கேள்வி - இருதரப்பு வர்த்தக செயற்பாடுகள் குறைந்து வருவதாக கூறப்படுவது உண்மையா? இலங்கை - இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த உங்கள் திட்டம் என்ன?

பதில் - இந்தியாவும் இலங்கையும் வர்த்தகத்திலும் வணிகத்திலும் விரிவான உறவுகளைக் கொண்டுள்ளன . பல ஆண்டுகளாக இந்தியாவும், இலங்கையும் தெற்காசியாவில் வலுவான வர்த்தக பங்காளிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உண்மையில், இந்தியா 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார நடவடிக்கைகளின் வீழ்ச்சியும் இலங்கை அறிமுகப்படுத்திய பல்வேறு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தில் சரிவுக்கு காரணமாகியது.

2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்க தினைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் , 2020 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு வர்த்தகம் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத் தொகையானது 2019 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு வர்த்தகத்தை விட சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் குறைவாகும். இருந்தும் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான (எட்கா) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான் நோக்கம் குறித்து இலங்கையின் வர்த்தக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டமை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே 11 சுற்று பேச்சுவார்த்கைள் நிறைவடைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எவ்வாறாயினும் கொவிட்-19 வைரஸ் புதிய தடைகளை தாண்டி பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வளர்ச்சியடையும் என்றே நம்புகிறோம் . இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் இருதரப்பு வர்த்தகம் மீண்டும் முந்தைய நிலைகளுக்கு முன்னேறி மேலும் வளர உதவும். இரு தரப்பிலும் வணிகத்திற்கும் தொழில் துறைக்கும் இடையில் மேம்பட்ட ஈடுபாட்டுடன் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த அனைத்து பங்குதாரர்களுடனும் பணியாற்றி வருகிறோம்.

அத்துடன் எரிசக்தி, போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பு, பால், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், கிராமப்புற தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்கள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகை பொருட்கள் போன்ற பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளையும் அடையாளம் கண்டு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் முதலீட்டிற்கு உகந்த கொள்கை சூழலால் இங்கு ஊக்குவிக்கப்படுவார்கள். அத்துடன் இந்தியாவின் பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை ஊக்குவிக்கவும் ஆர்வமாக உள்ளோம்.

கேள்வி - இலங்கை அகதிகள் தங்கள் தாயகத்திற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப இந்தியா உதவுமா? இந்த விடயத்தில் இந்தியாவின் திட்டம் என்ன?

பதில் - இது சம்பந்தமாக ஏற்கனவே இருதரப்பு புரிதல்கள் உள்ளன. அதற்கினைய, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தானாக முன்வந்து விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியா அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும். அத்தகைய நபர்கள் திரும்பும்போது அவர்களுக்கான மீள்குடியேற்றத்திற்கான வாழ்வாதார தொகுப்பு இருந்தால் உதவும்.

கேள்வி - பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்குச் சென்றபோது இலங்கை தமிழ் பிரச்சினைகள் குறித்து பேசினார். தமிழர் பிரச்சினையில் இந்தியா இனி பெரிய பங்கு வகிக்குமா?

பதில் - இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் நிலையான நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 2020 செப்டம்பர் 26 திகதி மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டிலும், உச்சிமாநாட்டிற்குப் பிறகு இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையிலும் பிரதமர் மோடி இலங்கை தமிழ் பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார். இலங்கையுடனான பல்வேறு மட்டங்களில் இருதரப்பு தொடர்புகளும் இந்த விடயத்தில் உள்ளன. நல்லிணக்கத்தை அடைவதன் மூலமும், அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்துவதன் மூலமும் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் நடக்கும் என இலங்கை மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கேள்வி - இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஜெனிவா அறிக்கையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பதில் - ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பான விடயங்களிலும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா அக்கறையுடன் அவதானத்தில் கொண்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்திய தூதுக்குழு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கை தரப்பும் தங்களது மதிப்பீட்டை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே சரியான முறையில் இந்தியா செயற்படும் என்பதையே கூற விரும்புகின்றேன்.

கேள்வி - சீனா - இலங்கை உறவுகள் வலுவடைந்துள்ளது. இது எவ்வாறான தாக்கத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தும்?

பதில் - இதனை விரிவாக தெளிவுப்படுத்துகின்றேன். இந்தியா - இலங்கை உறவுகள் பல தசாப்தகால பழைமையான பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது. இருதரப்பு உறவின் அடித்தளம் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் மொழிகளின் பொதுவான தன்மைகளில் தங்கியிருக்கிறது. மேலும் தற்காலத்தில் செழிப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் அமைதி, திரைப்படங்கள், இசை, கிரிக்கெட், தொழில்நுட்பம் மற்றும் நம் மக்களிடையேயான நெருங்கிய உறவுகள் போன்றவையும் ஆழமாக வேருன்றியுள்ளது.

இந்த பின்னணியைக் கருத்தில் கொண்டு, மூலோபாயம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களுக்கும், இந்தியா மற்றும் இலங்கையின் அபிலாஷைகளுக்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பு உள்ளது. இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய ஆதாரமாகவும் உள்ளது. 

எனவே இருதரப்பு நீண்டகால, ஆழமான வேரூன்றிய மற்றும் பன்முக நாகரிக உறவுகளைப் பார்க்கும்போது, இலங்கையுடனான தனது உறவுகளை வேறு எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க இந்தியா விரும்பவில்லை. அதே போன்று இலங்கையின் தலைமைத்துவமும் நம் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதி மற்றும் நல்வாழ்வுக்கு தேவையான சரியான தேர்வுகளை எடுக்க வல்லது என்றே இந்தியா சமமாக நம்புகிறது.

கேள்வி - பிரதமர் மோடி கடந்த ஆண்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மூன்று அல்லது நான்கு முறை உரையாடியிருந்தார். அதே போன்று பிரதமர் மோடியின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடனான தொடர்பு என்ன, குறிப்பாக 2019 ஆண்டு டெல்லி பயணத்திற்கு பின்?

பதில் - 2019 ல் பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் இந்தியாவுக்கு முதல் பயணங்களை மேற்கொண்டனர். கொவிட் - 19 சவால்கள் இருந்த போதிலும் இரு நாட்டு தலைவர்ளும் இந்த காலகட்டத்தில் தொடர்ந்தும் சிறந்த வகையில் தொடர்பிலிருந்தனர். இந்த உறவின் சிறப்பம்சமாக 2020 செப்டம்பரில் பிரதமர் மோடியும் பிரதமர் ராஜபக்ஷவும் மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியிருந்தனர். கடிதங்கள் பரிமாற்றமும் காணப்பட்டது. கொவிட் காலங்களில் கூட, இந்தியா - இலங்கை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் விரைவான வளர்ச்சிக்கு தலைவர்களிடையே அடிக்கடி தொடர்புகொள்வது விலைமதிப்பற்ற வழிகாட்டுதலுக்கு ஒரு ஆதாரமாக இருந்து வருகிறது.

கேள்வி - இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கரின் விஜயத்தின் முக்கிய பங்களிப்பு என்ன?

பதில் - கொவிட்-19 சவால்கள் மற்றும் இடையூறுகள் இருந்தபோதிலும், 2021 ஜனவரி தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டார். இரு நாடுகளின் முன்னுரிமைகள் இரு தரப்பு உறவுகளின் உயர் மட்டத்தை இவ்விஜயம் பிரதிப்பலிக்கின்றது.

மேலும் இருதரப்பு உறவுகளின் முழு வரம்பு மற்றும் பரஸ்பர ஆர்வத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றிய பயனுள்ள விவாதங்களை ஜெய்சங்கர் கொழும்பில் முன்னெடுத்திருந்தார். இந்த விஜயம் அனைத்து துறைகளிலும் இந்தியா-இலங்கை உறவுகளின் நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் உதவியது.

அத்துடன் அதே மாதத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொவிட் 19 தடுப்பூசிகளை இலங்கை பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெய்சங்கரின் வருகையின் பின்னரே இலங்கை மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை இந்தியாவால் தொடங்க முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22