(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கத்தோலிக்கசபை வரலாற்றில் முதல் தடவையாகவே கறுப்பு ஞாயிறு தினம் ஒன்றை பிரகடனப்படுத்தி இருக்கின்றது. உயிர்த் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லாமையே இதற்கு காரணமாகும். அத்துடன் கத்தோலிக்க மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாங்கள் போராடுவோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்ன தெரிவித்தார்.

ஒற்றையாட்சி முறையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு - காவிந்த ஜயவர்த்தன |  Virakesari.lk

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து, தாக்குதலில் மரணித்தவர்களின் சடலங்களை வைத்து பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் தற்போது விசாரணை அறிக்கையை மறைத்து வருகின்றது. 

தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் 22 பாகங்களை சட்டமா அதிபருக்கு இதுவரை வழங்கவில்லை. அறிக்கையில் முக்கியமான பகுதிகளை வழங்காமல் சட்டமா அதிபரினால் எவ்வாறு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்?

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த அதிகாரிகளை அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கின்றது. அதேபோன்று தாக்குதலை அடிப்படையாக்கொண்டு கத்தோலிக்க, முஸ்லிம் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சபையிலும் அதனையே மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதுவரை ஒருவருக்கு எதிராகவேனும் வழக்கு தாக்கல் செய்யவில்லை.

தாக்குதலின் பின்னணியை தேடி, குற்றவாளிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. 

அந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. அதனால்தான் கத்தோலிக்க சபை வரலாற்றில் முதல் தடவையாக கறுப்பு ஞாயிறு தினத்தை பிரகடனப்படுத்தியிருக்கின்றது.

அத்துடன் இந்த தாக்குதல் இடம்பெறும்வரை அதனை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அவர் தற்போது அரசாங்கத்துடன்தான் இருக்கின்றார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அச்சப்படுகின்றது.

 ஏனெனில் சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகின்றது. அதனால்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது என்றார்.