தோட்டத்தொழிலாளர்களின் உரிமைக் குரலை இராணுவத்தை கொண்டு அடக்க முயற்சி: சபையில் இராதாகிருஷ்ணன்

By J.G.Stephan

10 Mar, 2021 | 05:54 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை திசை திருப்ப தொழிலாளர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து இராணுவத்தை கொண்டு தொழிலாளர்களை அடக்கி அச்சுறுத்த அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் சபையில் குற்றம் சுமத்தினார். 

இராணுவத்தை கொண்டு வடகிழக்கு மக்களை அடக்குமுறைக்குள் உற்படுத்திய யுத்தமொன்றுக்கு வழிவகுத்ததை போலவே மலையகத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கத்தின் அனுமதியுடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் போதே அவர்  இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

மலையகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதியில் ஹோல்டன் தோட்டத்தில் தொடர்ச்சியாக 32 ஆவது நாளாகவும் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 தொழிலாளர்களுக்கும் தோட்ட நிருவாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக  இந்த போராட்டம்  முன்னெடுக்கப்படுகின்றது. இதில் எட்டு பெண் தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை சபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நிருவாக அதிகாரிகள் தொழிலாளர்களை அடித்ததன் காரணமாகவே இந்த பிரச்சினையின் ஆரம்ப குழப்பநிலை ஏற்பட்டது. அதனை அடுத்து பிரச்சினைகள் வளர்ந்து இன்று வேலைநிறுத்த போராட்டம் நீடுக்கின்றது. இதில் கம்பனிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளே  காரணமாகும். இந்த பிரச்சினை தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்ட வேளையில் நுவரெலியா பகுதியில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாகவும், எல்.ரி.ரி ஈயின் செயற்பாடுகள் மலையகத்திலும் இருக்கின்றது என்ற விதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.

ஆகவே தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சுட்டிக்காட்டி, பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமே முன்னெடுக்கப்படுவதாக நாடகமொன்றை சித்தரித்து தோட்டக் கம்பனிகள் செயற்படுகின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது. தோட்ட துரைமார்கள் வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளர்களுக்கு  எதிரான போராட்டத்தை  முன்னெடுத்துள்ளமையும் இதற்காகவேயாகும். ஆரம்ப  காலத்தில் வெள்ளைக்காரர்கள் தொழிலாளர்களை அடக்கி ஆண்டதை போன்று இன்று பெருந்தோட்ட கம்பனிகளும் அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களை அடக்கியாள நினைக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right