(நா.தனுஜா)
இந்தியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், தனிப்பட்ட நோக்கத்தில் அந்த நிறுவனத்திற்கு கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு முனையத்தை வழங்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது எமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இப்போது மக்கள் அன்றாடத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு மத்தியில் எவ்வாறு தொழிலுக்கு, பாடசாலைக்குச் செல்வது, எத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவை தொடர்பில் இராணுவத்தினர் எமக்குக் கற்பிக்கின்றார்கள்.

இவற்றுக்கு மத்தியில் கொழும்புத்துறைமுகத்தின்  கிழக்கு முனையம் மற்றும் மேற்கு முனையம் என்பவையும் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவிற்கு கிழக்கு முனையத்தை வழங்குவதாகக் கூறியது. அதன்பின்னர் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அதனை வழங்குவதாக ஜனாதிபதி கூறினார். எனினும் அதனை வழங்கமுடியாத நிலையேற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மேற்கு முனையத்தை வழங்குவதாக இராஜதந்திர அடிப்படையில் இந்தியாவிற்கு அறிவித்துவிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

எனினும் அத்தகைய உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என்று இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கூறியதைத் தொடர்ந்து, தாம் இந்திய அரசாங்கத்துடன் பேசவில்லை என்றும் நேரடியாக அதானி நிறுவனத்துடன் இதுபற்றிப் பேசியதாகவும் உதய கம்மன்பில கூறுகின்றார். இது தாய், தந்தையின் பெயர்கள் இல்லாத பிறப்புச்சான்றிதழைப் போன்று உள்ளது.

இந்தியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், தனிப்பட்ட 'டீல்' ஒன்றின்  ஊடாக அந்நிறுவனத்திற்கு மேற்கு முனையத்தை வழங்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களையே கூறுகின்றனர். அதேபோன்று இந்தியாவிற்கு வழங்கிய திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மீளப்பெறுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

 ஆனால் அது குறித்து பிரதமரிடம் வினவியபோது 'பைத்தியம்' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இதுவே தற்போதைய அரசாங்கத்தினதும் அமைச்சரவையினதும் நிலையாகும்.  

அடுத்ததாக முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு முற்படுகிறார்கள். இனவாதம் மேலோங்கும் போது முஸ்லிம் சட்டங்களை இலக்கு வைக்கின்றார்கள். முஸ்லிம் சட்டத்தை யார் மாற்றினாலும் நாங்கள் மாற்றிக்கொள்ளப்போவதில்லை. குர்-ஆனும், ஹதீஸும், ஷரியாவுமே எமது சட்டம் என்றால், நாம் அதற்குத்தான் மதிப்பளிப்போமே தவிர அரசாங்கத்தின் சட்டங்களைக் கருத்திற்கொள்ள மாட்டோம். அரசாங்கத்தின் சட்டம் என்பது அரசாங்கத்திற்கும் நாட்டிற்குமானது. நாங்கள் குர்-ஆனுக்கும் ஹதீஸுக்குமே மதிப்பளிப்போம். பல வருடகாலமாக நாம் அதனையே பின்பற்றி வருகின்றோம். தற்போது ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ தெரிவாகியிருக்கிறார் என்பதற்காக எம்மால் எமது சட்டங்களை மாற்றிக்கொள்ள முடியாது என்றார்.