(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது அது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதோடு , போராட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

நாலக கொடஹேவா பிணையில் விடுதலை | Virakesari.lk

தெரணியகல பிரதேசத்தில் திங்களன்று நடைபெற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி திட்டங்கள் பலவும் வீழ்ச்சியடைந்திருந்தன. ஒரு புறம் பொருளாதாரம் , மறுபுறம் மக்களின் வாழ்வாதாரம் என்பன பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதும் அனைத்தும் மாற்றமடைந்துள்ளன.

கடந்த அரசாங்கத்திற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 நாளாந்த சம்பளத்தைக் கூட பெற்றுக் கொடுக்க முடியாமல் போனது. எனினும் தற்போதைய அரசாங்கம் அதனைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

தம்மைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாவர்களே அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது தாக்குதல்கள் தொடர்பில் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சிலர் கறுப்பு ஞாயிறு போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர்.

நாம் எந்த சந்தர்ப்பத்திலும் நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை. நீதிமன்றத்திற்கும் நீதிக்கும் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. சுதந்திரத்தைப் போலவே சுயாதீனத்தன்மையுடன் செயற்படுவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றவாளிகளை இனங்காணப்பட்டு தண்டனைக்கு உட்படுத்த முடியும்.

எமது அரசாங்கம் சட்டத்தை மாற்றியமைக்கும் அரசாங்கமல்ல. பலவீனமான ஆட்சியிலிருந்து நாட்டை இந்த அரசாங்கம் மீட்டெடுத்துள்ளது. இது மக்களின் அரசாங்கமாகும். அதன் காரணமாகவே ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.