இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் 2021 ஆம் ஆண்டுக்கான வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

திலகரத்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியினர் இதுவரை எதிர்கொண்ட நான்கு போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் தோல்வியடைந்துள்ளனர்.

எனினும் ஏனைய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு அணித் தலைவர் டில்ஷானின் பங்களிப்பானது ஈடுசெய்ய முடியாத வகையில் அமைந்துள்ளதுடன், அவரது துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சுகளும் எதிரணிக்கு மரண பயத்த‍ை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

அது தவிர 44 வயதான டில்ஷானின் களத்தடுப்பும் இலங்கை அணிக்கு இரும்பு சுவராக அமைந்துள்ளது.

நடப்பு தொடரில் மொத்தமாக 4 இன்னிங்ஸ்களை எதிர்கொண்ட அவர் 138 ஓட்டங்களையும், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று ராய்பூரில் நடந்த ஆட்டத்தில் தில்ஷான் 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

மார்ச் 2 ஆம் திகதி அவுஸ்திரேலிய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தின்போது, 3 விக்கெட்டுகளை கைப்பற்றியமைக்காக அவருக்கு போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.