( இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ் )

இராமேஸ்வரம், மண்டபம் அருகே புதுமடம் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனை கண்ட கிராம மக்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். 

உலகிலேயே மிக அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார்வளைகுடா கடற்பகுதியாகும். 

இந்நிலையில் இன்று மாலை புதுமடம் கடற்கரையில் சுமார் 2000 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட அரியவகை திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இறந்த திமிங்கலம் நோய்வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிலான சரக்கு கப்பலின்  எஞ்சினில் அடிபட்டு இந்த திமிங்கலம் இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பின்னர் திமிங்கலத்தின் உடலை கைப்பற்றிய மண்டபம் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அதனை அருகில் உள்ள கடற்கரை மணலில் புதைத்தனர்.