(செ.தேன்மொழி)

பெண்களின் பிரச்சினைகளை அறிந்துக் கொண்டு அவர்களுக்கான தீர்வினை வழங்கும் நோக்கத்திலான நடமாடும் சேவையை வழங்க எதிர்பார்துள்ளதுடன் , அவர்களுக்கென்று தனியான ஜனாதிபதி செயலணி மற்றும் ஜனாதிபதி ஆணைகுழுவை அரச அனுமதியுடன் ஸ்தாபிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் , எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர்தின நிகழ்வுகள் தலவத்துகொட  பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று திங்கட்கிழமை  இடம்பெற்றிருந்தது. இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

பெண்களை முதல்நிலைப்படுத்தும் விசேட ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும். அரச அதிகாரத்துடன் அதனை ஸ்தாபிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம். 

இதேவேளை பெண்களின் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பெண்களுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். 

தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதுடன் , அவை வெறும் பதிவுகளாக மட்டுமே காணப்படுகின்றன. இந்நிலையில் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனால் எமது சட்டவிதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சி அதிகாரங்கள் இல்லாதவர்கள் கூட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதற்கமைய கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் தங்களது உரிமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுவதற்காக எம்மால் உதவி ஒத்தாசைகளை வழங்க முடியும். இதன்போது பெண் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு போதிய வசதிகளை செய்துக் கொடுத்து , அவர்கள் ஊடாக எமது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

பெண்கள் தங்களது வீடுகளில் மட்டுமன்றி வெளியிலும் பல்வேறு கொடுமைகளுக்குள்ளாகி வருகின்றார்கள். எனினும் பெண்களின் தலைமையிலான குடும்பங்களும் இருக்கின்றன. அதற்கமைய இவ்வாறு 2 இலட்சம் குடும்பங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கான வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

பாராளுமன்றம் மற்றும் மாகாணசகைளில் பெண்களின் உறுப்புரிமை மிகவும் குறைந்தளவிலே உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் பெண்களாலும் ஆட்சி அதிகாரங்களை செயற்படுத்த முடியும் என்று காண்பித்துள்ளனர். அவர்களை ஆதாரமாக கொண்டு எதிர்வரும் காலங்களில் பெண்கள் இந்த தலைமை பொறுப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கென்று வழங்கப்பட்டு வந்த சலுகைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.  இதேவேளை அவர்களது சுகாதார நலன்புரி வசதிகளை பெற்றுக் கொடுப்பதும் மிக முக்கியமானதாகும்.

இதுத் தொடர்பில் பேசியதன் காரணமாக என்னை விமர்சித்த அனைவரும் , இன்று எனது கருத்துடன் இணங்கிபோயுள்ளனர். இதுத் தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.  ஒரு சில நாடுகளில் பெண்களுக்கான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்த பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் பல பெண்கள் தங்களது கல்வி வாழ்க்கையையே நிறுத்தி வைத்துள்ளனர். அதனால் இது போன்ற பாதுகாப்பு அங்கிகளை பாடசாலை மட்டத்திலான பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் பெண்கள் தொடர்பான  பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக நடமாடும் சேவையை செயற்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.