(எம்.மனோசித்ரா)

துடுவௌ பிரதேசத்திலிருந்து மிஹிந்தல பிரதேசத்திலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேனொன்று சாரதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த 40 வயதான குறித்த பெண்ணின் தலைபகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது மேலும் இரு ஊழியர்கள் வேனில் பயணித்ததாகவும் , அவர்களின் உடல் நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.