(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றத்தில் 3ஆவது சக்தியாக இருக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சியை அடுத்த தேர்தலில் இரண்டாவது நிலைக்கு கொண்டு வருவதற்கு சுதந்திர கட்சியின் பெண் பிரதிநிதிகள் முயற்சிக்கவேண்டும். பொதுஜன பெரமுனவினால் எந்த நெருக்கடிகள் வந்தாலும் அரசாங்கத்தை பாதுகாத்துக்கொண்டு கட்சியை கிராம மட்டத்தில் இருந்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டு் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

as

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டர்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சர்வதேச மட்டத்தில் பெண்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோன்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாகின்றார்கள். அதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண்கள் தினம் என ஒரு தினத்தை பெயரிட்டு பெண்களை கெளரவப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றது. எமது நாட்டிலும் அரசாங்கத் துறைகளில் பெண்களே அதிகம் இருக்கின்றனர். ஆனால் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. அதனால்தான் கடந்த அரசாங்கத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க ஆரம்பமாக உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதி நிதித்துவம் 25வீதம் கட்டாயமாக்கப்பட்டது.

மேலும் மகளிர் தினத்தை கொண்டாடும் சிறிலங்கா சுதந்திர கட்சியினருக்கு பெரும் கெளரவம் இருக்கின்றது. எமது நாட்டின் மற்றும் உலகில் முதலாவது பெண் பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர் என்ற பெருமை எமது பெண்களுக்கு இருக்கின்றது. சிறிமா பண்டாரநாயக்க அரசியலில் நேர்மையாக செயற்படுவதற்கு காரணமாக இருந்தது பண்டார நாயக்கவின் முன்மாதிரியாகும். பண்டாரநாயக்க 3அரை வருடங்கள்தான் நாட்டை ஆட்சியை செய்தார்கள். ஆனால் இலங்கையை சர்வதேச மட்டத்துக்கு பிரபல்லியப்படுத்த அவர் செயற்பட்டார்.

மேலும், அரசாங்கத்திடமிருந்து சலுகை கிடைக்காவிட்டாலும் பெண்கள் மத்தியில் அரசியல் செய்து எமது அங்கத்துவத்தை அதிகரித்துக்கொள்ள நாங்கள் முயற்சிக்கவேண்டும். பாராளுமன்றத்தில் 3ஆவது இடத்தில் இருக்கும் சிறிலங்கா சுதந்திர கட்சியை 2ஆவது இடத்துக்கு முன்னேற்ற கட்சியின் பெண் பிரதிநிதிகள் முறய்சிக்கவேண்டும். அதற்காக இன்று முதல் கிராம மட்டத்தில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டும் என்றார்.