(செ.தேன்மொழி)
போதைப் பொருட்களை கடத்திச் சென்ற இலங்கை படகுகள் மூன்றை இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதுடன், படகில் பயணித்த 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் தெற்கு கரையோரப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரையோர பாதுகாப்பு பிரிவினரால் சந்தேகத்திற்கிடமான படகுகள் மூன்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனை சோதனைச் செய்த பாதுகாப்பு படையினர் படகில் மறைத்து எடுத்துவரப்பட்ட  200கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 60 கிலோ கிராம் ஹசீஸ் ரக போதைப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய கரையோர பாதுகாப்பு படையின் வருஷா எனப்படும் கப்பலே இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது படகில் 19 பேர் வரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சொந்தமான ஆகர்ஷாதுவ, சதுராணி 3 மற்றும் சதுராணி 8 ஆகிய படகுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது ஆகர்ஷாதுவ படகில் பயணித்தவர்கள், லக்ஷாத் தீவுக்கு 400 கடல் மையில் தொலைவில் பாகிஸ்தானிய கப்பல் ஒன்றினால் இந்த போதைப்பொருள் தங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களும் , படகும் இந்தியாவின் திருவாந்திரபுரம் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கரையோர பாதுகாப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.