பெண்களின்  தேசம் என்று கூறுமளவுக்கு இன்று உலகம் முழுக்க பல துறைகளில் பெண்கள் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் சாதனைகளை நினைவுகூருவதற்கும் அடுத்த பெண் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

  சுமார் 230 வருடங்களுக்கு முன்பு பிரஞ்சுப் புரட்சி காலகட்டத்தில், தமக்குரிய உரிமைகளை கேட்டு பாரிஸ் நகர வீதிகளில் பெண்கள் அணிதிரண்ட வரலாறே பின்பு சர்வதேச பெண்கள் தினமாக பரிணமித்தது. இதன் தொடர்ச்சியான போராட்டங்களின் பிரதிபலிப்பாக  பிரான்ஸில் 1848 ஆம் ஆண்டு   பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட தினமான மார்ச் 8 ஆம் திகதியை, சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்க பின்னாட்களில் முடிவு செய்யப்பட்டது. 

 ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு வருடமும் தனது அங்கத்துவ நாடுகளிடையே பெண்கள் தொடர்பான நலன்களை மேம்படுத்தும் திட்டங்களை அமுல்படுத்தும்படி கோரிக்கை விடுத்து வருவதுடன் பிரதான தொனிப்பொருளுக்கமைவாக அந்த வருடம் முழுதும் செயற்பாடுகளை முன்னெடுக்க வலியுறுத்துகின்றது. 

இவ்வருடத்தின் தொனிப்பொருளாக‘ தலைமைத்துவத்திலுள்ள பெண்கள்: கொவிட்- 19 உலகில் சமத்துவமான எதிர்காலத்தை அடைதல் ”என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருட ஆரம்பத்தில் உருவான கொரோனா தொற்று முழு உலகையும் ஆக்கிரமித்திருந்த நேரத்தில், பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது, சிறுமிகள் மற்றும் குடும்பப்பெண்களின் அர்ப்பணிப்பு , பெண்களை  தலைவர்களாகக் கொண்ட நாடுகளில் இத்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கொண்டாடும் ஒரு அம்சமாகவே இந்த தொனிப்பொருள் விளங்குகிறது.

  

எனினும் எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு பாலின சமத்துவம் கிடைத்து விட்டதாக எண்ணி விட முடியாது. இது குறித்து ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டாரஸ் பெண்கள் தொடர்பான தனது அறிக்கையில் சில விடயங்களை  தெளிவுபடுத்தியுள்ளார்.  

பொது வாழ்க்கை குறித்து முடிவெடுப்பதிலும் பெண்கள் மிகவும் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் 22 நாடுகளில் மட்டுமே பெண்களின் தலைமைத்துவம் உள்ளது. தேசிய பாராளுமன்றங்களில்  பெண்களின் சதவீதம் 24.9 மட்டுமே. அரசியலில் இவ்வாறு காட்டப்படும் புறக்கணிப்பு  இதே ரீதியில் முன்னெடுக்கப்பட்டால்,  ஆண்களுக்கு நிகரான சமத்துவம் உருவாக 130 ஆண்டுகள் தேவைப்படும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.