முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை 2021 மே 31 ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது.

சம்பிக்க ரணவக்க மற்றும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதி திலும் குமார ஆகியோரே மேற்கண்ட மூவர் ஆவர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில், சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில்,  சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இரு குற்றப் பத்திரிகைகள் ஊடாக இரு வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மட்டும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் மற்றைய வழக்கில் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.