அங்கீகரிக்கப்படாத தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று இலங்கை படகுகள் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக 'த இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

அகர்ஷா துவ, சது ராணி 03 மற்றும் சாது ராணி 08 ஆகிய படகுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 19 நபர்களுடன் மார்ச் 5 திகதி மினிக்காய் தீவிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பில் பயணித்த இந்த மூன்று இலங்கை படகுகளும் 'வராஹா' என்ற இந்திய கடற்படையினருக்கு சொந்தமான கப்பல் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது இந்திய காவல்படையினர் குறித்த மூன்று படகுகளையும் சோதனையிட்டபோது, அங்கீரிக்கப்படாத தகவல்தொடர்பு உபகரணங்கள், போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் விரிவான விசாரணைக்காக படகுகள் ஞாயிற்றுக்கிழமை விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த படகுகளிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயினும், 60 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.