தெற்கு பாகிஸ்தானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லாகூர் செல்லும் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு, ஏற்பட்ட விபத்தில் ஒரு பயணி உயிரிழந்ததுடன், மேலும் 40 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

15-அப் கராச்சி எக்ஸ்பிரஸ், கராச்சியில் இருந்து லாகூருக்கு செல்லும் வழியில் தெற்கு சிந்து மாகாணத்தில் ரோஹ்ரி மற்றும் சாங்கி நிலையங்களுக்கு இடையே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன.

விபத்தில் ஒரு பெண் உயரிழந்தார் மற்றும் 40 பேர் காயமடைந்தனர், கராச்சி-லாகூர் ரயில்களை மூன்று முதல் 10 மணி நேரம் தாமதப்படுத்தியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

விபத்தினையடுத்து மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் மக்களின் உதவியுடன் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இறந்த பயணி கராச்சியில் இருந்து சாஹிவால் சென்று கொண்டிருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது குடும்பத்திற்கு ரயில்வே அதிகாரிகள் ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபா இழப்பீடு வழங்கியுள்ளனர், காயமடைந்தவர்களுக்கு 100,000 முதல் 500,000 பாகிஸ்தான் ரூபா வரை இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விபத்தின்போது பயணிகளில் பெரும்பாலோர் உறங்கிக் கொண்டிருந்ததால், விபத்து அவர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது. 

மீட்புப் பணிகள் பயணிகளால் சுய உதவி அடிப்படையில் தொடங்கப்பட்டன. எவ்வாறாயினும், விரைவில் அம்பியூலன்ஸ்கள் குறித்த பகுதிக்கு சென்று காயமடைந்தவர்களை தாலுகா மருத்துவமனை ரோஹ்ரி மற்றும் சிவில் மருத்துவமனை சுக்கூருக்கு மாற்றியுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ரயில் தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. தடம் புரண்டதற்கான காரணத்தை அறிய இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படும் என்று ரயில்வே திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.