இலங்கைக்கான ஊடக பாலினம் தொடர்பான சாசனம் இம்மாதம் 3ஆம் திகதி மெய்நிகர் வழியாக வெளியிடப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், 21 ஊடக நிறுவனங்கள், பாலினம் தொடர்பில் செயற்படும் 20 நிபுணர்கள் மற்றும் பாலினத்தை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் சிவில் சமூக உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் 14 ஊடக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து பெறப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளது.


ஊடக பாலின சாசனம் என்பது ஊடகங்களுக்குள் ஒரு நியாயமான மற்றும் சீரான பாலின சித்தரிப்பு, ஊடக உள்ளடக்கத்தில் பாலினம் சார் பிரச்சினைகளை உள்ளடக்குதல் மற்றும் ஊடக நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான உகந்த சூழலை ஏற்படுத்தல் ஆகியவற்றின் தேவை குறித்து ஊடக நிறுவனங்களுக்கு வழிகாட்டும் ஒரு உள்ளூர் முயற்சியாகும்.

ஹாஷ்டேக் ஜெனரேஷன் அமைப்பின் தலைமையில் இந்த சாசனம் வெளியிடப்பட்டது. அத்தோடு, ஊடகவியலாளர் ஸ்மிருதி டேனியல் தலைமையில் 'ஊடகங்களில் பாலின உள்ளடக்கம்: இன்றும் நாளையும்' என்ற தலைப்பில் ஒரு குழு கலந்துரையாடலும் இடம்பெற்றது. நடைமுறை சிக்கல்கள், அவற்றை எவ்வாறு சமாளிக்க முடியும் மற்றும் அவற்றை கடந்து முன்னோக்கிச் செல்ல எவ்வாறான இயக்கவியல் செயற்பாடுகளை பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக குழு ஆராய்ந்தது.

இந்த வெளியீட்டில் ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆலோசகர் அமலினி டி சாய்ராவின் நெறியாள்கையில் ஒரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்பட்டது. முதலாவது செயற்பாடாக, ஊடக நிறுவனங்களுக்குள் இருக்கும் கட்டமைப்புகளிலுள்ள தவறுகளை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதென அவர் வலியுறுத்தினார்.

பாலின பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கை ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மாறிவரும் ஊடக பரப்பு மற்றும் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகள் காரணமாக, அவற்றை முழுமையாக செயற்படுத்த வரையறைகள் காணப்படுகின்றன. ஊடகங்களில் உண்மையான பாலின சமத்துவத்தை அடைவதற்காக செயற்படுவதாக பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதியளித்தனர்.