(செ.தேன்மொழி)

வெள்ளவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் சிக்கி காயமடைந்திருந்த நபர்களுள் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - வெள்ளவத்தை வீதியில் நேற்று சனிக்கிழமை காலை 5.45 மணியளவில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்ட போது , பாதையில் சென்ற நபர்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். 

அதற்கமைய மேற்படி விபத்தில் 57 வயதுடைய நபரொருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததுடன் , பின்னர் 77 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ளார்.

களியாட்ட விடுதியொன்றில் மதுபானம் அருந்திவிட்டு வந்து கொண்டிருந்த சாரதியொருவரினால் செலுத்தப்பட்ட காரே இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் , குறித்த சாரதியும் , அதில் பயணித்தை மற்றைய நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை , இந்த விபத்தை அடிப்படையாகக் கொண்டு , இவ்வாறு களியாட்ட விடுதிகளுக்கு முன்னாள் போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்படத்தக்கது.