- ரொபட் அன்டனி  -

International Women of Courage award - 2021 விருது வழங்கும் நிகழ்வு மார்ச் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 8 மணியிலிருந்து 9:30 வரை இணையவழி ஊடாக அமெரிக்க இராஜாங்க செயலர் மற்றும் முதல் பெண்மணி தலைமையில் நடைபெறவிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் 14 பெண்களுக்கு இம்முறை விருதுகள் கிடைக்கவுள்ளன. 

போரின் வலி, சுமைகளை எதிர்கொள்வது பெண்கள் தான்  - ரனிதா கூறுகிறார்  

இலங்கையில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றும் முன்னேற்றத்தை காண வேண்டும் என்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்ற சூழலில், வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பல வழிகளிலும் வலுவூட்டப்படவேண்டிய நிலையில்     சர்வதேச விருது ஒன்றை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருக்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா. 

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வழங்கும் 2021 ஆம் ஆண்டுக்கான தைரியமிக்க பெண்களுக்கான அமெரிக்காவின் சர்வதேச  விருதை சட்டத்தரணியான ரனிதா ஞானராஜா இம்முறை இலங்கையின் சார்பில்  பெற்றுக் கொள்ளவுள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி ஆகியோர் பங்கேற்று இந்த விருதுகளை வழங்கவுள்ளனர். போர் மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால்  பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணியாற்றுகின்ற, அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற அவர்களை வலுவூட்டுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற பெண் செயற்பாட்டாளர்களுக்கு இந்த விருது கடந்த 15 வருடங்களாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. 

 இதுவரை உலக அளவில் 155 பெண்கள் இந்த விருதை பெற்றிருக்கின்றனர். இலங்கையில் இதற்கு முன்னரும் மூன்று பெண்கள் அதாவது துறைசார் பெண் செயற்பாட்டாளர்கள் இந்த விருதை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இம்முறை 2021 ஆம் ஆண்டுக்காக மனித உரிமை செயற்பாட்டாளரான சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவுக்கு கிடைக்கின்றது. இம்முறை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது வழங்கும் நிகழ்வு மார்ச் 8ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 8 மணியிலிருந்து 9:30 வரை இணையவழி ஊடாக நடைபெறவிருக்கின்றது. இதன்போது அமெரிக்க ராஜாங்க செயலரும் முதல் பெண்மணியும் உலகளாவிய ரீதியில் 14 பெண்களுக்கு இந்த விருதுகளை வழங்குவர். 

இந்நிலையில் இந்த பெருமைக்குரிய இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விருதை பெற்றுக் கொள்கின்ற ரனிதா ஞானராஜா இதுதொடர்பாக கேசரியுடன் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டார். 

கேள்வி: இந்த விருதை பெற்றமை தொடர்பில்  ?  

பதில்: இந்த விருது எனக்கு கிடைத்தது என்று நான் தனிப்பட்ட ரீதியில் அடையும் சந்தோசத்தைவிட சட்டத்துறையில்இ மனித உரிமை செயற்பாட்டில் களத்தில் இறங்கி பணியாற்றுகின்ற பெண் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கிடைத்த ஒரு விருதாக பார்க்கின்றேன்.  இதனூடாக  பெண்களின் முன்னேற்றத்திற்காகஇ அவர்களை வலுவூட்டுவதற்காகஇ அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக செயற்படுகின்ற பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.   எனவே அவர்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கின்றேன்.  

கேள்வி: உங்களுக்கு ஏன் இந்த விருது கிடைத்தது என்று நினைக்கிறீர்கள்?

பதில்:  நான் எனது தொழில்சார் வாழ்க்கையில் பெண்களின் உரிமைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் முக்கியமாக போரினால்  பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காகவும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்காகவும்  ஒரு சட்டத்தரணியாக  செயற்பட்டு வருகின்றேன். அதுபோன்ற வழக்குகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றேன்.  காணாமல் போனோரின் உறவினர்கள்இ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின்  உறவினர்கள் எதிர்கொள்கின்ற சவால்களை தீர்ப்பதற்காக என்னாலான பணியை செய்கின்றேன்.  அதுமட்டுமன்றி குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளில் முன்நின்று நான் ஒரு சட்டத்தரணியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  அந்தவகையில் அவ்வாறு பெண்களை வலுவூட்டுவதற்காக அவர்களின் பிரச்சினைகளை சட்ட ரீதியாகவும் மனித உரிமை மற்றும்   சமூக ரீதியாகவும் தீர்த்து வைப்பதற்கு செய்கின்ற முயற்சிக்காக இந்த விருது கிடைத்தது என்று நான் நம்புகிறேன்.  

கேள்வி: வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றனர்? 

பதில்: பிரதான பல சவால்கள் காணப்படுகின்றன. முக்கியமாக  வடக்கு கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகம் உள்ளன. வடக்கு கிழக்கில்  அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   யுத்தத்தினால் காணாமல்போனோரின் குடும்பங்கள்இ     யுத்தத்தில் இறந்தவர்களின்  குடும்பங்கள்  மற்றும் அரசியல் கைதிகளின்  குடும்பங்கள்   என  குடும்பத் தலைவிகள்  பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  ஒட்டுமொத்தமாக போரின் வலியையும் சுமைகளையும் கூடுதலாக எதிர்கொள்வது பெண்கள்தான். பிரச்சினைகளை  முழுமையாக தீர்க்கவேண்டிய பொறுப்பு மற்றும் சுமை அவர்களுக்கே  உள்ளது.  அன்றாட பிரச்சினைகளை தீர்த்தல்இ குடும்ப தேவைகைள நிவர்த்தி  செய்தல் சுய தொழில் செய்வதற்கான வழியின்மைஇ நீதியை பெற வழியில்லாமை என பல சவால்கள் உள்ளன    

கேள்வி: சாதிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன ? 

பதில்:  என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்கான விடயங்களை தேடி ஓடிக் கொண்டிருக்க மாட்டேன்.   மாறாக என்னை சுற்றி இருக்கின்ற மக்களின் தேவைகள் என்ன? அவர்களின்  உரிமைகள் என்ன என்பதை தேடி அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு   சட்டத்துறை  ஊடாக எவ்வாறு பங்களிப்பு வழங்க முடியும் என்பதையே தேடிக்கொண்டு இருப்பேன்.  இதுவே எனது ஒரு ஊக்கமாக காணப்படுகிறது.  அதில் தடைகள் சிக்கல்கள் வந்தாலும் நான் எப்படியாவது போராடி அவற்றை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன். இதனையே நான் எனது வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்றேன்.  என்னுடைய அகராதியில் முடியாது என்று எதுவுமில்லை.  எதனையுமே முயற்சி செய்து பார்ப்போம் என்பதே எனது இயல்பாகும்.  

 வாழ்க்கையில் அதிகளவான தடைகள்இ சிக்கல்கள் வரலாம்.  நான் போர் சூழலில் வளர்ந்தவள்.  பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டவள்.இ  இவ்வாறான நிலையில் நான் ஒரு கடினமான துறையில் பயணித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்றால் அது சாதிக்கத் துடிக்கின்ற பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும். உங்களுக்கானதை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள்.  அதில் சவால்கள் வரும்போது அதனை போராடி பெற்றுக் கொள்ளுங்கள். 

கேள்வி: வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் விடயத்தில் உடனடியாக என்ன நடக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள்?  

பதில்: பாதிக்கப்பட்ட பெண்களின் போராட்டமானது நீதியானதும் உண்மையை தெரிந்து கொள்வதற்குமானதாக உள்ளது.  இந்த இரண்டையும் சரியான  பொறிமுறைகளை அடையாளப்படுத்தி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.  அவ்வாறு செய்யும் பட்சத்தில் அந்தப் பெண்கள் தங்களுக்கு இருக்கின்ற ஏனைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள்.   அந்தப் பெண்களுக்கு  அதற்கான உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கின்றது. இவ்வாறு ரனிதா குறிப்பிடுகிறார். 

மன்னாரில் பிறந்த ரனிதா கொழும்பு பல்கலையில் சட்டத்துறை கல்வி பயின்று சட்டத்தரணியானார்.  தனது சிறுவயதில் தந்தை காணாமல்போன நிலையில் வாழ்க்கையில் கடும் நெருக்கடிகளை வலியை சந்தித்த ரனிதா தான் எதிர்கொண்டதைப்போன்ற   கஷ்டங்களை எதிர்கொள்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்பதற்காக இந்த துறையை தெரிவு செய்து பணியாற்றிவருகிறார். 

இவ்வாறு  பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணியாற்றுகின்ற ஒருவருக்கு இந்த சர்வதேச விருது கிடைத்துள்ளமை  ரனிதா கூறுவதைப்போன்று ஏற்கனவே இந்த துறையில் பணியாற்றுகின்ற பெண்களுக்கு கிடைக்கின்ற அங்கீகாரமாகும். 

சாதிப்பதற்கும்  மக்களுக்கு பணியாற்றவும் என்ன தடைகள் வந்தாலும் தகர்த்துக்கொண்டு போகலாம் என்பதற்கு ரனிதா ஞானராஜாவின் இந்த சாதனை ஒரு  முன்னுதாதரணமாகவே  இருக்கும்.  ரனிதா மேலும்  பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அவர்களை வலுவூட்டுவதற்காக  பணியாற்ற நாமும் வாழ்த்துகிறோம்.