(செ.தேன்மொழி)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பளத்தை எந்த வழியிலாவது பெற்றுக் கொடுப்போம். இதுத் தொடர்பில் பெருந்தோட்ட தொழிற்சங்களுக்கும், பெருந்தோட்ட கம்பனி முதலாளிமார்களுக்குமிடையில் இணக்கப்பாடு ஏற்படாததன் காரணமாக, சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க  சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 100 ஆவது வருட பூர்த்தி விழா இடம்பெற்றிருந்ததுடன், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்துக்கான நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் உழைக்கும் மக்கள் அனைவரதும் உரிமைகளை பாதுகாப்பதுடன், அவர்களது பொருளாதார நிலைமைகளையும் முன்னேற்ற வேண்டும். இந்நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாடானது தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையிலானதாக அமைந்திருக்க வேண்டுமே தவிர அவற்றை பாதிப்படையச் செய்யும் வகையில் அமைந்திருக்க கூடாது. தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசியல் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னேற்றலாம். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க முடியுமா? நாட்டின்  அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னேற்ற முடியுமா? போன்ற விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் எம்மால் தனித்து பயணிக்க முடியாது. அதனால் தொழிற்சங்கங்களினதும், முதலாளிமார்களினதும் நோக்கம் நீண்டதாக அமைவதுடன் , எதிர்கால இலக்குகளை அடையக்கூடியதாக இருக்க வேண்டும். தொழிற்துறை அமைச்சர் என்ற வகையில் தொழிலாளர்களின் நலனுக்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.  

அதற்கமைய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்காக நாம் ஒரு முறையொன்றையும் தயாரித்திருந்தோம். எனினும் முதலாளிமார்களுக்கும் , பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணைக்கப்பாடின்மையின் காரணமாக அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனது.

குதிரையை தண்ணீருக்கு அருகில் அழைத்துச் செல்லதான் முடியும், தண்ணீரை குடிக்கச் செய்ய முடியாது. நாம் தண்ணீருக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அது குடிக்காவிட்டால் எம்மால் எதுவும் செய்யமுடியாது. இந்நிலையில், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் , முதலாளிமார்களுக்குமிடையில் இணைக்கப்பாடு ஏற்படாததன் காரணமாக எம்மால் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போனது. இதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமே சிறந்தது என்றே நான் எண்ணுகின்றேன். எனினும் இவர்கள் மத்தியில் இணக்கப்பாடு  ஏற்படவில்லை. எவ்வாறாயினும் இந்த சம்பள  விவகாரத்துக்கு தீர்வுக்கான வேண்டும் என்று எண்ணியிருந்தோம்.

அதனால் சம்பள நிர்ணய சபைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கமைய, சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாடி , 1000 ரூபாய் சம்பளம் தொடர்பில் வர்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கத்திலே வழங்கப்பட்ட வாக்குறுதியை நாம் எப்படியாவது நிறைவேற்றுவோம். பெருந்தோட்ட துறைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவொரு இலாபமும் கிட்டாது. கம்பனிகளுக்கு 99 சதவீதம் இலாபம் கிடைக்கும் வகையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆட்சியிலிருந்த எந்தவொரு அரசாங்கமும் இதன் செயற்பாடுகள் தொடர்பில் அக்கறைக் கொள்ளவில்லை. அதன் பிரதிபலனையே நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.

இந்நிலையில் பெருந்தோட்ட துறைகள் தொடர்பில் நாம் புதிதாக சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெருந்தோட்ட பகுதிகளில் எந்தவொரு பயனும் பெறாமல் இருக்கும் பெருமளவான நிலப்பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை பெருந்தோட்ட மக்களும், அந்த பகுதிகளை அண்மித்து இருப்பவர்களுக்கும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இதன்போது அந்த நிலங்களில் வீடுகளை அமைக்காது , இந்த பகுதிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் தெரிவிக்க போகின்றோம். மேலும் பெருந்தோட்ட மக்களின்  அடிப்படை வசதிகள், கல்வி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.