(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத்  தொழிலாளர்களின்  நீண்ட கால கோரிக்கையாகக் காணப்படுகின்ற 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை கம்பனிகள் நிச்சயம் வழங்க வேண்டும் என்பதோடு, கூட்டு ஒப்பந்தமும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தால் மாத்திரமே சம்பள அதிகரிப்பு தவிர்ந்த ஏனைய அனைத்து சலுகைகளையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என பதுளை மாவட்டத்தில் தேயிலை தொழிலாளர்கள் சார்பில் பிரிதிநிதியொருவர் தெரிவித்தார்.

பெருந்தோட்ட  கம்பனிகள் அவர்களின் நலன் சார்ந்து மாத்திரம் சிந்திக்காது, தொழிலாளர்களின் வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய விடயங்களையும் கவனத்தில் கொண்டு சம்பள அதிகரிப்பை மேலும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல் உடனடி தீர்வை வழங்க வேண்டும். இதன் மூலம் தொடர்ந்தும் பெருந்தோட்ட உற்பத்திகளின் மேம்பாட்டுக்கு எமது ஒத்துழைப்புக்களை வழங்கவும் தயாராகவுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போது நாளொன்றுக்கு 18 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரமே முழுநாளுக்கான சம்பளம் வழங்கப்படும் என்று தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே எவ்வாறேனும் 18 கிலோ கொழுந்தினை பறிக்குமாறு பெண் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கடும் மழை அல்லது வரட்சியான காலநிலை நிலவும் போது இது சாத்தியப்படாது. அத்தோடு தற்போது தேயிலை செடிகளுக்கிடையில் வளரும் புற்கள் வேலையாட்களைக் கொண்டு அகற்றப்படுவதில்லை. கொழுந்து பறிக்கும் அதே வேளை, தொழிலாளர்களே புற்களையும் அகற்ற வேண்டியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஆரம்பத்தில் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வந்த பல சலுகைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை மீள வழங்கி குறைபாடுகளை நீக்கினால் தொழிலாளர் பற்றாக்குறையையும் தவிர்த்துக் கொள்ள முடியும். கொவிட் பரவல் காரணமாக வெளியிடங்களில் தொழில் புரிந்து வந்த பல இளைஞர் யுவதிகள் இன்று தொழிலை இழந்து நிர்கதியாகியுள்ளனர். அவ்வாறானவர்களுக்கு பெருந்தோட்டங்களில் வேலையைப் பெற்றுக் கொள்வதிலும் சிரமத்திற்கு முகங்கொடுக்கின்றோம். இவ்வாறு தொழிலை இழந்த இளைஞர் யுவதிகளும் தற்போது பெற்றோரையே தங்கி வாழ்கின்றனர். எனவே 1000 ரூபா சம்பள அதிகரிப்பு அத்தியாவசியமானதாகும்.

சம்பள அதிகரிப்பிற்கு அப்பால் சுகாதார நலன்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமாகும் என்பதே எமது கோரிக்கையாகும். 

கம்பனிகள் சம்பள உயர்வு விடயத்தில் இணக்கம் தெரிவிக்காமையின் காரணமாகவே இவ்விவகாரம் சம்பள நிர்ணயசபைக்கு கொண்டு செல்லப்பட்டது. எவ்வாறிருப்பினும் பெருந்தோட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக இந்த தொழிலையே தங்கியிருக்கின்றனர். எனவே தொழிலாளர்களுடன் நிர்வாகம் நேரடியாக கலந்துரையாடி அவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தி செயற்படுமாயின் பெருந்தோட்ட மேம்பாட்டுக்கு தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம் என்றார்.