-கார்வண்ணன்

இலங்கைத் தொடர்பில் கொண்டு வரப்படும் ஐ.நா.தீர்மானத்தில் இந்தியா இதுவரையில் மௌனமாக இருப்பது அதன் இயல்பான செயற்பாடு தான்.

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற முயற்சியில் இறங்கியிருக்கின்ற இலங்கை அரசாங்கம், இன்னொரு பக்கத்தில் இந்தத் தீர்மான வரைவில் திருத்தங்களைச் செய்யவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது. 

இலங்கைத் தொடர்பாக கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா, மலாவி,  பிரித்தானியா ஆகிய ஆறு அனுசரணை நாடுகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள பூச்சிய வரைவு என்று அழைக்கப்படும் முதல் நிலை வரைவு தொடர்பான, முறைசாரா கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

கடந்த முதலாம், 2ஆம் திகதிகளில் அனுசரணை நாடுகளால் இரண்டு முறைசாரா கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மீண்டும், வரும் 8 ஆம், 10ஆம் திகதிகளில் மேலும் இரண்டு முறைசாரா கலந்துரையாடல்களுக்கு இந்த நாடுகள் ஏற்பாடு செய்துள்ளன.

மெய்நிகர் முறையிலேயே இந்த முறைசாரா கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. 

அனுசரணை நாடுகளால் இந்த முறை அதிகளவு முறைசாரா கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு, முக்கிய காரணம், பூச்சிய வரைவுக்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தான்.

இந்த தீர்மான வரைவை நிறைவேற்றுகின்ற விடயத்தில், அனுசரணை நாடுகளுக்கு சந்தேகங்கள் இல்லாதபோதும், இதனை வலுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் ஒரு பகுதி வலியுறுத்தி வருவதும், இன்னொரு பகுதி நாடுகள் பலவீனப்படுத்த முனைவதும் தான், சிக்கலை தோற்றுவித்துள்ளது.

தற்போது நடைபெறும் 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவதற்கான தீர்மான வரைவுகளை, சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும், 11ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியுடன் நிறைவடைகிறது.

எனினும், மார்ச் 16 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரை திருத்தங்களை முன்வைப்பதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பின்னரே, இந்த வரைவு குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படும்.

கடந்த முதலாம், 2ஆம் திகதிகளில் நடந்த முறைசாரா கலந்துரையாடல்களின்போது காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த விவாதங்களின் போது, மேற்குலக நாடுகள், தீர்மான வரைவில், மொழி நடையை மேலும் இறுக்கமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றன.

அதேவேளை, இலங்கை அரசாங்கமும், அதன் நட்பு நாடுகளும், இந்த தீர்மான வரைவிலுள்ள சில பந்திகளை நீக்க வேண்டும் அல்லது நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டிருக்கின்றன.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க 

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-1

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/