(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகவும், மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாகவும் செயற்பட கூடாது என்று இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக அபிவிருத்தி செய்வது குறித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் நாளை துறைமுக அதிகாரச சபை தலைவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பான திட்டத்தில் இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளதாக இந்திய அரசாங்கம்  அறிவித்துள்ளது. 

மேற்கு முனைய அபிவிருத்தி குறித்து அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்  உறுதிப்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கருத்து பொய்யானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தற்போது அதிக அக்கறை கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. 

இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயற்படுவதை அறிய முடிகிறது. 

அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் அதானி நிறுவனத்துடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை பலப்படுத்த மேற்கு முனையத்தை தாரைவார்க்க முயற்சிக்கிறார்கள்.

மேற்கு முனைய விவகாரத்தில் அதானி நிறுவனம் இந்திய அரசாங்கத்தை தவிர்த்து நேரடியாக இலங்கையுடன் தொடர்பு கொள்வது அதிருப்தியளிக்கும் செயற்பாடாகும். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக தனித்து அபிவிருத்தி செய்ய முடியுமாயின் ஏன் மேற்கு முனையத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாது?

கொழும்பு துறைமுகத்தின் ஏதாவதொரு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் தனிப்பட்ட முயற்சியை ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் முன்னெடுக்கிநார்கள்.

இது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகி, மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாக செயற்பட முடியாது.

மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தொழிற்சங்க போராட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம்.மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபையினால் தேசிய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்ய முடியும். 

இவ்விடயம் குறித்து நாளை துறைமுக அதிகார சபை தலைவருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.