(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தாக்குதல்கள் இடம்பெறும் போது நான் ஜனாதிபதியாக இருக்கவில்லை. எனது அரசாங்கமும் ஆட்சியில் இருக்கவில்லை. 

எவ்வாறிருப்பினும் தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டம் இன்று சனிக்கிழமை குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதனையடுத்து சில அரசியல்வாதிகள் இதில் இலாபமீட்ட முயற்சிக்கிறார்கள். இதனை எம்மீது சுமத்த முயற்படுகின்றனர். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. இதன் போது நாம் அதிகாரத்தில இருக்கவில்லை.

2019 செப்டெம்பர் மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியே என்னிடம் கையளிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையில் பல இடங்களில் யார் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

' 2015 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கவில்லை. பலவீனமடைந்திருந்த அரசாங்கமே 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பிரதான காரணியாக அமைந்தது. 

எனவே இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் மாத்திரமின்றி முழு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். ' என்று அறிக்கையின் இறுதி பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது அப்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காதவர்களைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தேசிய பாதுகாப்பிற்கே நாம் முன்னுரிமை வழங்கினோம். எனினும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக பேணப்படாமையின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்பதையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாம் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளித்திருக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நாம் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும். 

இதனை நாம் நிராகரிக்கின்றோம். காரணம் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்று அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் தற்போது எமது அரசாங்கம் ஆட்சியிலிருப்பதால் இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது எமது கடமையாகும். இதனை நாம் முறையாக செய்வோம். நாம் ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் பலரை கைது செய்துள்ளோம் என்றார்.