(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இன்சாப் அஹமட் என்பவரால் நாட்டுக்கு தருவிக்கப்பட்டதாக கூறப்படும் 6000 வாள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் நிலைமையை, பாதுகாப்பு செயலர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் கேட்டறிந்து நீதிமன்றுக்கு அறிவிப்பதாக சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

 சட்ட மா அதிபர் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார்.

நாட்டுக்கு தருவிக்கப்பட்டதாக கூறப்படும் 6000 வாள்கள் தொடர்பில்  விஷேட விசாரணைகளை கோரி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போதே கலாநிதி அவந்தி பெரேரா இதனை அறிவித்தார்.

 இந்த மனுவானது நேற்று மேன் முறையீட்டு  நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய  நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இம்மனு மீதான மேலதிக பரிசோதனைகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டிலுள்ள பிரபல தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போது, வெளிநாடுகளிலிருந்து 6000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பின் அதனை வெளிப்படுத்துமாறு கோரியே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர்  ஆகியோர் அம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  சார்பில் , கொழும்பு சின்னமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்டவரின் தேவைக்கு அமைய, முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் குறித்த வாள்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் அவற்றில் 600 வாள்கள் குறித்து தகவல் கிடைத்ததாகவும் ஏனைய 5400 வாள்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்காமையால், அது குறித்து விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிடுமாறு மனு ஊடாக கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.