(இராஜதுரை ஹஷான்)

இவ்வருட இறுதிக்குள் மின்விநியோக செயற்திட்டத்தை முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.  அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முறையாக செயற்படுத்தவில்லை.

எமது ஆட்சியின் அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் பழிவாங்களுக்காக இடை நிறுத்தப்பட்டன. இதனால் மக்களே பாதிக்கப்பட்டார்கள். இவ்வாறான நிலை இனியொருபோதும் தோற்றம் பெறாது.

அனைத்து அபிவிருத்தி பணிகளும் சிறந்த முறையில் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கெரவலபிடிய பகுதியில் நிர்மாணிக்கப்படும் இலங்கையின் முதலாவது  இயற்கை திரவ எரிவாயு திட்டத்தின்  மங்கள  நிகழ்வு இன்று இடம் பெற்றது இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய மின்கட்டமைப்பில் 350 மெகாவோட் மின்னை உற்பத்தி செய்யும் லக்தனவி  மின்நிலையத்தின் முதல்கட்ட நடவடிக்கைகளை 12 மாத காலத்துக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.முதல் கட்டத்தில் 220 மெகாவோட் மின்சாரமும்,இரண்டாவது கட்டத்தில் 130 மெகாவோட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கத்தை பொறுப்பேற்றவுடன் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொள்ள நேரிட்டது. பலம் கொண்ட நாடுகளை காட்டிலும் கொவிட்-19வைரஸ் தாக்கத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளோம்.எதிர்காலத்தில் தோன்றவுள்ள அனைத்து சவால்களையும்  பொறுப்புடன் வெற்றிக் கொள்வோம்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கவில்லை. எமது அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி நிர்மாண பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. நாட்டின் அபிவிருத்தி துறை பாரிய வீழ்ச்சிக்கண்டது.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அபிவிருத்தி பணிகளை மீண்டும் செயற்படுத்தியுள்ளோம்.மின்வலுவை முன்னிலைப்படுத்தி உலக நாடுகள் செயற்படுகின்றன.மனித வாழ்வோடு மின்வலு தொடர்புப்பட்டதாக காணப்படுகிறது.

மின்வலுத்துறையில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.இவற்றை அறிந்தே நாங்கள்  நீர்வலுத்துறை மின்சாரத்தை மாத்திரம் நம்பியிருக்காமல் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தை ஸ்தாபித்தோம்.இதற்கும் பல மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டார்கள்.தேவையற்ற கருத்துக்களை குறிப்பிடவே கடந்த அரசாங்கம் ஆட்சியதிகாரத்தை பதவி காலத்தில் பயன்படுத்திக் கொண்டது.

நாட்டு மக்களுக்கு குறைவான கட்டணத்தில் மின்சாரத்தை விநியோகிக்கும் வகையில் அனல்மின்நிலையம்,சூரியமின்நிலையம், திண்மகழிவகற்றல் ஊடாக மின்நிலையம் என பலதரப்பட்டசெயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.உலகில் உள்ள அனைத்து தொழினுட்பதுறைகiளின் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு 350 மெகாவோட் மின்னை தேசிய மின்கட்டமைப்பில் உற்பத்தி செய்யும் இத்திட்டம் இலங்கையின் மின்சாரத்துறைக்கு பாரியதொரு வெற்றியாகும்.

இலங்கையின் முதலாவது இயற்கை திரவ எரிவாயு மின்நிலையம் முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ளது.திட்டங்களை பேச்சளவில் மாத்திரம் குறிப்பிடவில்லை. மாறாக செயற்பாட்டளவிலும் நிரூபித்துள்ளோம்.நாட்டு மக்களும் இதனையே எம்மில் எதிர்பார்க்கிறார்கள். அதனாலேயே ஆட்சியதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

இந்த மின்னிலையத்தின் முதல்கட்ட நடவடிக்கை 21மாத காலத்திற்குள் நிறைவு பெறும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.முதல்கட்டத்தில் 220மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச கல்வியினால் வளர்ச்சிப் பெற்றுள்ள திறமைவாய்ந்த தேசிய பொறியியலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்திட்டத்தின் முழு பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அவர்களால் முடியும்.இரண்டாம் கட்டத்தை இவ்வருடத்தின் இறுதிக்குள் நிறைவு செய்ய.

இரண்டாம் கட்டத்தில் 130 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.எதிர்வரும் 4 வருட காலத்திற்குள் மின்வலுத்துறைக்கான கேள்விகள் அனைத்தும் முழுமைப்படுத்தப்படும்.தேசிய மின்கட்டமைப்புக்கான கேள்வியில் 13 சதவீதத்தை கெரவலபிடியவில் நிர்மாணிக்கப்படும் இயற்கை திரவ எரிபொருள் மின் திட்டம் பூர்த்தி செய்யும். இதுவே நாட்டின் முன்னேற்றம்.

அபிவிருத்தியின் போது தேசியத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.அதனை விடுத்து ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்காக தேசிய செயற்திட்டத்தை முன்னெடுக்க முடியாது.அரசாங்கத்தை பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் 3மின்நிலையத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.அரசியல் நோக்கங்களுக்காக மக்களுக்கான அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்த கூடாது .அனைத்து அபிவிருத்தி பணிகளும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான புதிய வகை செயற்திட்டங்களினால் மின்கட்டணத்தை குறைக்க முடியும்.மக்களுக்கு தடையின்றி மின்விநியோகித்தல் சிறந்த சேவையாகும்.நாட்டில் 99 சதவீதமானோருக்கு மின்சார வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.84000 ஆயிரம் பேருக்கு மாத்திரமே மின்சார வசதிகளை பெற்றுக் கொடுக்கவுள்ளது.இவ்வருடத்துக்குள் மின்சார வசதிகள் வழங்கலை 100 சதவீதமாக முழுமைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தில் எந்தளவிற்கு மின்சார துண்டிப்புக்கள் இடம் பெற்றன என்பதை அறிந்துள்ளோம்.இவ்விடயம் குறித்து அவர்களுக்கு எவ்வித அக்கறையும் இருக்கவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டது என்றார்.