"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய, தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை". இது ஆபிரகாம் லிங்கன் அவர்களின் கூற்று. 

இக்கால சமூகமும் இப்படித்தான்.  2021ஆம் ஆண்டின் முதலாம் நாள் தொடக்கம் இன்றளவில் நூற்றுக்கணக்கிலான வீதி விபத்துக்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றது. 

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறதேதவிர, குறைவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. பல்வேறு சட்ட திட்டங்களும், வீதி ஒழுங்கு முறைகளும், கண்காணிப்பாளர்களும், தண்டனைகளும் இருந்தபோதிலும் எதனால் இவ்வாறு நிகழ்கின்றது? 

சற்று ஆழமாக எமது வாழ்க்கைக் கோலத்தோடு இதனை ஒப்பிட்டு பார்ப்போமானால், எங்களுடைய விழுமியங்கள் விபத்துக்கள் ஏற்படுவதில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியும். 

அதிலும் முக்கியமாக பொறுமை, அன்பு, பிறர் நலன், விட்டுக்கொடுப்பு, நேர முகாமைத்துவம், திட்டமிடல் போன்ற பண்புகள் இருக்குமாயின் விபத்துக்களின் எண்ணிக்கையை நிச்சயம் படிப்படியாக குறைத்துக்கொள்ள முடியும்.

விழுமியங்களுக்கும் விபத்துக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். 

இன்றைய காலக்கட்டத்தில் எங்களுடைய எண்ணங்கள் எப்படிப்பட்டதாக இருக்கிறது, சிறு வயது முதல் நாம் விளையாடும் விளையாட்டுக்களிலேயே போட்டித் தன்மையும் விட்டுக்கொடுக்காமையும் எம்மோடு சேர்ந்து வளர்கிறது.

 

விளையாட்டு வினையாகும் என்பதுபோல் அதே மனநிலையோடு வாகனம் செலுத்தும் ஒருவர் அடுத்தவரை முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு காணப்படுவதால்தான் அதிகளவு "overtakes"யினால் விபத்துக்கள் பதிவாகின்றன.

அதுமட்டுமில்லாது, விசேடமாக வளைவுகள் உள்ள இடங்களில் முந்தி செல்ல முயல்பவர் உணர்வதில்லை தன்னுடைய தவறால் எதிரில் வருபவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கப்படுகின்றது என்பதனை. 

பிறர் நலன் கருதும் ஒருவர் நிச்சயம் தன்னால் இன்னொருவரின் உயிர் போவதை விரும்பமாட்டார். இதுவும் விழுமியம் தான்.

இன்றைய வாழ்க்கை கோலத்தில் விபத்துக்களில் தாக்கம் செலுத்தும் இன்னுமொரு விழுமியம்தான் நேர முகாமைத்துவம். 

24 மணித்தியாலங்களில் எங்களுடைய தேவைக்காக நாம் வைத்திருக்கும் நேரத்தில் அதிகமான பங்கு கைத்தொலைபேசிக்கும் சமூக வலைத் தளங்களுக்கும் அடிமையாகி இருப்பதால், நேர முகாமைத்துவமின்றி எந்த வேலையிலும் ஒரு அவசரம் காணப்படுகிறது. 

இரவில் தூங்கும் நேரம் குறைந்ததால் உடல் நோய்கள் மட்டுமன்றி மனஉலைச்சலும், காலையில் நேரத்திற்கு எழும்ப முடியாத ஒரு களைப்பும் ஏற்படுகிறது. 

காலையில் நேரத்தோடு எழுந்து வேலைகளை ஆரம்பிப்போரைவிட சமூக வலைத்தளங்களுக்கு சென்று வணக்கம் செலுத்திவிட்டு வருவோர்தான் இங்கு அதிகம். 

இப்படி காலையிலேயே நேரம் விரயமாவதனால்தான் முழு நாளுமே அவசரமாக ஓட வேண்டியிருக்கிறது. இதுவும் விழுமியம் தான்.

எதிர்கால சந்ததியினரை விழுமியங்களோடு வளர்த்து விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது சமூகத்தின் கடமையாகும். எனவே, மாற்றத்தை எம்மிடம் இருந்தே ஆரம்பிப்போம். விழுமியங்களோடு வாழப் பழகுவோம்.

- சங்கீதா என்டனி குமார்