(எம்.மனோசித்ரா)

கொவெக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ள 1.44 மில்லியன் தடுப்பூசிகளின் முதலாவது அங்கமான 264,000 அஸ்ரஸெனிக்கா தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இவ்வாறு முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள 264,000 தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்ட, விரைவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு முன்னுரிமையளித்து வழங்கப்படவுள்ளது. 

சுகாதார அமைச்சு மற்றும் கொவெக்ஸ் வசதி ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்கமைய 1.44 மில்லியன் தடுப்பூசிகள் யுனிசெப் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டு மே மாதம் வரை கட்டம் கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ வழியாக 264,000 கொவாக்ஸ் தடுப்பூசிகள் யுனிசெப் மூலம் வழங்கப்படுகிறது. 

அத்தோடு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமானது  சுகாதார அமைச்சுடன் இணைந்து தடுப்பூசி வழங்கலுக்கான தயார்படுத்தல், தடுப்பூசி வழங்கலை அமுலாக்குதல் மற்றும் தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்திற்கு அமைவாக வழங்கல்கள், விநியோக நிர்வாகம், அபாய நிலைமைகள் தொடர்பான தொடர்பாடல், தடுப்பூசிக்கான கேள்வியை அதிகரித்தல் என்பவற்றிற்கான ஆதரவை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.