(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்த இருவரது சடலங்கள் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசம் ஒன்றில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிகாட்டல் அடங்கிய அறிக்கை சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 

கொழும்பு சட்டவைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் வெலிகந்த ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக எடுத்துச்செல்லப்படுகின்றது.

மேலும் கொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யும் நடவடிக்கை கடுமையான சுகாதார பாதுகாப்பு முறைமையின் கீழ், பிரதேசத்தின் சுகாதார அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழே இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.