(நா.தனுஜா )

இவ்வாண்டில் உணவுப்பொருட்களின் விலைகள் தளம்பல் நிலையிலுள்ள போதிலும் பணவீக்கம் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது என்றும்  ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதியில் பணவீக்கம் மேலும் மட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டத்தின் போதே இவ்விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன. 

அதன்படி நாட்டின் பேரண்டப் பொருளாதார நிலைமைகளையும் உள்நாடு மற்றும் உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கருத்திற்கொண்டு துணைநில் வைப்பு வசதி வீதத்தை 4.50 சதவீதமாகவும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தை 5.50 சதவீதமாகவும் பேணுவதற்கு மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

அத்தோடு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார நடவடிக்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கில், உற்பத்தித்திறன் கூடிய துறைகளுக்கு முனைப்புடன் கடன் வழங்கும் வகையிலான நிதியியல் முறைமைக்கான தேவை குறித்தும் நாணயச்சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் குறைவான பணவீக்க நிலைமையில், பொருளாதாரம் உறுதியாகப் புத்துயிர்பெறும் அறிகுறிகளைக் காண்பிக்கும் வரையில் குறைந்த வட்டிவீதக்கட்டமைப்பைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

அதேவேளை இலங்கையின் பொருளாதாரம், கொள்கை ரீதியான தூண்டுதல்கள் மற்றும் மேம்பாடடைந்துவரும் வியாபார சிந்தனைகளின் விளைவாக இவ்வாண்டு குறிப்பிடத்தக்களவு மீட்சியடையும் என்றும் மத்திய வங்கியின் நாணயச்சபை எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கிறது.

அதேபோன்று கடந்த 2020 ஆம் ஆண்டு இறக்குமதிகள் மீதான செலவினத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்று ஏற்பட்டமையின் விளைவாக, கடந்த வருடத்திற்கான வர்த்தகப்பற்றாக்குறை 2 பில்லியனால் சுருக்கமடைந்துள்ளது. 

இந்நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிய நடவடிக்கைகளின் மூலம் இவ்வாண்டிற்கான வர்த்தகப்பற்றாக்குறை மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுமென்றும் நாணயச்சபை எதிர்வுகூறியிருக்கிறது.

அத்தோடு இவ்வாண்டில் உணவுப்பொருட்களின் விலைகள் தளம்பல் நிலையிலுள்ள போதிலும் பணவீக்கம் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது. 

ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதியில் பணவீக்கம் மேலும் மட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் நடுத்தரகாலத்தில் பணவீக்கத்தை 4 - 6 சதவீதம் என்ற வீச்சில் பேணுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.