24 மணித்தியாலத்தில் 15 பேர் பலி : 40 பேர் காயம் - காரணத்தை தெரிவிக்கிறார் அஜித் ரோஹண

By Digital Desk 2

05 Mar, 2021 | 02:21 PM
image

( செ.தேன்மொழி )

வீதி விபத்துகளினால் நேற்று மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளில் சிக்கி நேற்று  வியாழக்கிழமை மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 40 பேர் வரையிலும் காயமடைந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களில் 11 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் , எஞ்சிய நால்வரும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பாதசாரதிகளே அதிகளவாக உயிரிழந்துள்ளதுடன் , அதற்கமைய 6 பாதசாரதிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 5 பேர் , முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் , சைக்கிள் மற்றும் வேனில் பயணித்த தலா ஒருவருமாக மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைகாலமாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக பொலிஸார் எத்தனை முயற்சிகளை எடுத்தாலும், பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுகளுக்கமையவே வீதி விபத்துகளினால் இந்தளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இவ்வாறு பதிவாகாத விபத்துகளும் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right