கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி மற்றும், வழிகாட்டல்களை சுகாதாரத அமைச்சு வழங்கியுள்ள நிலையில், சடலங்களை அடக்கம் செய்யவதற்குப் பொருத்தமான இடத்தினை அடையாளம் காணும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், காகித நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகரில் பொருத்தமான காணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணி பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே தலைமையிலான குழுவினர் குறித்த காணியை பார்வையிட்டதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப்பெறுவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயவலாளர் வி.தவராஜா, ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகத்தினர், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவன சம்மேளன பிரதிநிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்குடா ஜனாஸா நலன்புரி சங்க பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்த்தர்களும் குறித்த இடத்திற்குச் சென்று  பார்வையிட்டனர்.

இது தொடர்பில் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின்  முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல்  கருத்து வெளியிடுகையில், பிரிகேடியர் பிரதீப் கமகேவுடன் இணைந்து நாம் குறித்த காணியை பார்வையிட்டோம்.

அவ்விடத்தில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இவ்விடத்தில் மக்கள் நடமாட்டமில்லை. இக் காணியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலேயே மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் மொத்தமாக 10 ஏக்கர் காணி உள்ளது. இதில் 2 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதனுள்ளேயே ஜனாஸாக்களை அடக்கம் செய்ய  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இராணுவ காவலரணன் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜனாஸாக்களின் உறவினர்கள் இருவரும் சுகாதார ஊழியர்களும் மாத்திரமே அடக்கம் செய்யும் இடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் மாத்திரம் இதுவரை 10 ஜனாஸாக்கள் அடக்கத்திற்காக காத்திருக்கின்றன. 

கல்முனை வைத்தியசாலையில் 4 ஜனாஸாக்களும் காத்தான்குடி வைத்தியசாலையில் 2 ஜனாஸாக்களும் ஏறாவூர் வைத்தியசாலையில் 2 ஜனாஸாக்களும் ஆரையம்பதி வைத்தியசாலையில் 1 ஜனாஸாவும் என 10 ஜனாஸாக்கள் உள்ளன.

முதற்கட்டமாக இவற்றை இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான உறுதிமொழியை பிரிகேடியர் பிரதீப் கமகே தந்துள்ளார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவின் கீழ் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாஸாக்களை உடனடியாக விடுவித்து அடக்கம் செய்வதற்கான அதிகாரம் அவ்வப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் இன்றையதினம் அடக்கம் செய்வதற்கு குறித்த அனுமதியை நீதிமன்றம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஊடாக அவசரமாக பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அவசர ஏற்பாடுகளைச் செய்வதற்கான விஷேட கூட்டங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

காணிகளைப் பெறவும் ஏனைய செலவுகளுகளுக்கும் தேவையான நிதி உதவியைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஓட்டமாவடி, ஏறாவூர் காத்தான்னுடி சம்மேளனங்கள் முன்வந்துள்ளன என்றார்.