அமெரிக்க வணிகத் துறை வியாழக்கிழமை மியன்மாரின் பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் இரண்டு வணிக நிறுவனங்களை அதன் வர்த்தக தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

அதேநேரம் அமெரிக்க வர்த்தகத் துறை மியான்மருக்கு எதிரான அதிக ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அறிவித்தது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு உட்பட்ட பொருட்களை பர்மிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பர்மிய உள்துறை அமைச்சகம், ஆட்சி மாற்றத்திற்கு பொறுப்பான நிறுவனங்கள் மற்றும் சொந்தமான மற்றும் இயக்கப்படும் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது. 

தற்போதைய இராணுவ அரசாங்கத்தின் நியாயத்தன்மையை அங்கீகரிக்க அமெரிக்க அரசாங்கம் மறுத்ததையடுத்து நாட்டின் முன்னாள் பெயரான 'பர்மா' என்ற பெயரையே அமெரிக்கா தற்சமயம் பயன்படுத்துகிறது.

பெப்ரவரி முதலாம் திகதி மியன்மாரின் அரச ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் சுமார் 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

அது மாத்திரமன்றி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதுடன், ஒரு வருட அவசரகால நிலையை அறிவித்தது, அனைத்து அதிகாரத்தையும் இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லேங்கின் கைகளில் எடுத்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களின் விளைவாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாத்திரம் 38 பேர் உயிரிழந்தனர்.

அதேநேரம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடரும் போராட்டங்களில் மொத்தம் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.

இதேவேளை ஆட்சி கவிழ்ப்பிலிருந்து கைது செய்யப்பட்டவர்களைக் கண்காணிக்கும் அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம், 1,498 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.